ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: 14 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

By KU BUREAU

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. நாடு முழுவதும் 14 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.

இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்த தேர்வை நாடு முழுவதும் 618 மையங்களில் 12.58 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழக மாணவர் சுனய் யாதவ்: இத்தேர்வில் மொத்தம் 14 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் சுனய் யாதவ் 99.99% மதிப்பெண் பெற்று தேசியளவில் 25-வது இடம்பிடித்தார். மேலும், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின் னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தகவல் தெரிவித் துள்ளது.

அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இணையவழியில் பிப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE