சைபர் குற்ற புகார்கள் அதிகரிப்பு: 1930-ஐ தொடர் கொள்வதில் சிக்கல்!

By KU BUREAU

சிவகங்கை: சைபர் குற்றப் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அரசு அறிவித்துள்ள ‘1930’ என்ற எண்ணை தொடர்புகொள்ள புகார்தாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக மாற்று ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

வங்கி ஏடிஎம் காலாவதியாகிவிட்டது, பழைய ஏடிஎம் கார்டு எண், ரகசிய குறியீட்டை கேட்பது, வங்கியில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று கூறி விவரங்களை பெறுவது, இணையவழி திருமணப் பதிவு, பகுதி நேர வேலைவாய்ப்பு, இணைய டேட்டா இலவசம் தருவதாக ‘லிங்க்’ அனுப்புவது, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகர்களின் பெயரில் முகநூல், எக்ஸ் தளம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பறிப்பது, பணப் பரிவர்த்தனையில் சட்டவிரோதத்தில் ஈடுபட்டதாக கூறி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி மிரட்டுவது என பல்வேறு வழிகளில் சைபர் குற்றவாளிகள் பணம் பறித்து வருகின்றனர்.

சைபர் குற்றங்களை தடுக்கவும், வழக்குப் பதியவும் அந்தந்த மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவு இயங்கி வருகிறது. எனினும் உடனுக்குடன் புகாரை தெரிவிக்க ‘1930’ என்ற எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் சமீபகாலமாக ‘1930’ குறித்து செல்போனில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த எண்ணுக்கு நாளுக்குநாள் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் ‘1930’-ல் எப்போது தொடர்பு கொண்டாலும், இணைப்புக்காக பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலநேரங்களில் அழைப்பை ஏற்காமல் நின்றுவிடுகிறது. இதனால் புகார்தாரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த முனீஸ்வரி கூறுகையில், ‘எங்களை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள், பிளஸ் 2 பயிலும் எனது மகளுக்கு கல்வி உதவித் தொகை அனுப்புவதாகவும், அதற்கு ‘கூகுள் பே’ எண்ணை கொடுங்கள் என்று கூறினர். எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் ‘1930’-க்கு பலமுறை தொடர்பு கொண்டும், அழைப்பை ஏற்கவில்லை. இதனால் உடனடியாக புகார் கொடுக்க முடியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, ‘புகார்கள் அதிகாரித்துள்ளதால், அழைப்புகளை ஏற்க அதிக எண்ணிகையில் ஆட்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். ‘1930’-ஐ உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால் மாவட்ட சைபர் குற்றப்பிரிவை தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE