திருப்பூரில் அந்தரத்தில் தொங்கும் ரயில்வே மேம்பாலம்!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: ஆக்கிரமிப்பு அகற்றுவது, நிலம் கையகப்படுத்துதல், நீதிமன்ற வழக்கு என பல்வேறு தடைகளை கடந்து, 18 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடக்கத்தில் வேகமாக நடைபெற்ற பணிகள், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இத்திட்டம், திருப்பூர் மாநகர மக்களின் நீண்ட கால கனவுத் திட்டமாகும். திருப்பூரில் இருந்து போக்குவரத்து நெரிசலின்றி, பிற மாவட்டங்களுக்கு செல்லவும், பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்குள் நுழையவும் இந்த பாலம் பெரிதும் கைகொடுக்கும்.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் மக்களை இணைக்கும் வகையில், இந்த பாலப் பணிகளை மீண்டும் தொடங்கி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அவிநாசி சாலையில் இருந்து திருமுருகன்பூண்டி வரை 10-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் இருப்பதால் இந்த பாலம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும், என்றனர்.

திருப்பூர் மாநகரில் பல்வேறு பாலப்பணிகளை விரைந்து முடிக்க போராடிய ச.நந்தகோபால் கூறும்போது, ‘‘அணைப்பாளையம் பாலப்பணி பல ஆண்டுகாலமாக கிடப்பில் போட்டுள்ளதால், பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சுமார் 1,500 மீட்டர் தூரம் கொண்ட அணுகுசாலை, மண் சாலையாக மாறிவிட்டது.

இன்றைக்கு அந்த பகுதி மது அருந்துவோரின் கூடாரமாக மாறிவிட்டது. அணுகுசாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தார் சாலையாக மாற்றித்தர வேண்டும். அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதமாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE