வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே கிராமமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பயன்பெற பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த காளிநகர் பகுதியில் தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிநகர் பகுதியில் 125-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலிவேலை செய்து வருவோர் அதிகமாக வசிக்கின்றனர். எங்கள் பகுதியையொட்டி பாம்பாறு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த பாம்பாற்றின் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. ஆண்டு தோறும் பருவமழை குறைவாக பெய்யும்போது பாம்பாற்றில் குறைந்த அளவு தான் தண்ணீர் வரும்.
ஆனால், சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக காளிநகர் பகுதியையொட்டியள்ள பாம்பாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது. கடந்த சில நாட்களாக பாம்பாற்றில் குறையாமல் தண்ணீர் ஓடுவதால் எங்கள் பகுதி மக்களால் வாணியம்பாடி பகுதிக்கும், ஆலங்காயம் பகுதிக்கும் செல்ல முடியவில்லை.
காளிநகர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் இடுப்பளவு தண்ணீரை கடந்து செல்ல முடியவில்லை. இதனால், பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அரையாண்டு தேர்வு நேரம் என்பதால் வேறு வழியில்லாமல் பாம்பாற்றின் கரையின் இருபுறத்திலும் பெரிய அளவில் கயிறு கட்டி அதை பிடித்தப்படி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.
» பாஜக எம்பிக்களால் தாக்கப்பட்டேன்; முழங்கால்களில் காயம் ஏற்பட்டது - மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
ஆபத்தான நிலையில் தான் மாணவர்கள் பாம்பாற்றை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் பாம்பாற்றில் கட்டப்பட்டுள்ள கயிற்றை பிடித்தபடி தான் கடந்த சில நாட்களாக பயணம் செய்து வருகிறோம். இரவு நேரங்களில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் பாம்பாற்றை கடக்க சிரமப்படுகின்றனர்.
இதனால், வாழ்வாதாரத்தை இழந்து 125 குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. இது தொடர்பாக ஆலங்காயம் ஒன்றியக்குழு அலுவலகம், பூங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஒரு அரசு அலுவலகம் விடாமல் மனு அளித்து வருகிறோம். நாங்கள் படும் சிரமத்தை அதிகாரிகள் காதில் கூட வாங்குவதில்லை.
எனவே, எங்களின் நிலை அறிந்து காளிநகர் பாம்பாற்றில் உடனடியாக தரைப்பாலம் ஒன்றை அமைத்து தரவோ அல்லது தற்காலிக வழிப்பாதை அமைத்து தரவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே எங்களின் பிரதான கோரிக் கையாகும்’’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காளிநகர் பகுதியில் தரைப்பாலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் பரிந்துரை செய் துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தி, தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் அளவு குறைந்ததும் அங்கு ஆய்வு செய்ய உள்ளோம்’’ என்றனர்.