திருச்சி: திருச்சி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பச்சமலை பகுதிகளில் நிகழாண்டு மேற்கொண்ட 3-வது ஆய்வில் 126 வண்ணத்துப்பூச்சி வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உணவுச் சங்கிலித்தொடரில் வண்ணத்துப் பூச்சிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் மட்டும் 1,350 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 340 வண்ணத்துப் பூச்சி வகைகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 329 வண்ணத்துப்பூச்சிகள் வகைகள் உள்ளன.
இந்நிலையில், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பங்கள், வகைகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருச்சி வனக் கோட்ட தலைமை வனப் பாதுகாவலர் ஏ.பெரியசாமி உத்தரவுப்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் எஸ்.கிருத்திகா வழிகாட்டுதல்படி, பச்சமலைப் பகுதிகளில் 3-வது முறையாக வண்ணத்துப்பூச்சி வகைகள் கணக்கீடு, ஆய்வு செய்யும் பணி கடந்த டிச.14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
துறையூர் வன அலுவலர் ஆர்.சரவணன், இயற்கை மற்றும் வண்ணத்துப்பூச்சி அமைப்பு நிறுவனத் தலைவர் பாவேந்தன் அப்பாவு ஆகியோர் தலைமையில், மூத்த உறுப்பினர்கள் கே.ஷ்ராவண்குமார், ஹெச்.ரமணசரண் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். பச்சமலையில் செங்காட்டுப்பட்டி விரிவாக்கம், காளியம்மன் கோயில் திட்டு, சோலைமத்தி, கன்னிமார்சோலை, மேலூர், சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா பகுதி (டாப் செங்காட்டுப்பட்டி) மற்றும் மங்களம் அருவி ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 126 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இக்கணக்கெடுப்பின் சிறப்பு அம்சமாக பேண்டட் ராயல் (Banded Royal) எனப்படும் வண்ணத்துப்பூச்சி பதிவு செய்யப்பட்டது. இது தமிழகத்தின் கிழக்கு மலைப்பகுதிகளில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே காணப்படும் நீலம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை வண்ணத்துப்பூச்சி ஆகும்.
» பாஜக எம்பிக்களால் தாக்கப்பட்டேன்; முழங்கால்களில் காயம் ஏற்பட்டது - மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
இது இந்திய வனப்பாதுகாப்பு சட்டம், 1972-ன் அட்டவணை 2-ல் இடம்பெற்று சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 6 வண்ணத்துப்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்த, அழகிகள் (Swallow tails) 9, புல்வெளியாள்கள், நுனிச்சிறகன்கள், வெள்ளையன்கள் (Whites & Yellows) 18, வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் (brush-footed Butterflies) 37, நீலன்கள் (Blues) 35, உலோக மின்னிகள் (Metal marks) 1, தாவிகள், துள்ளிகள் (Skippers) 26 என 126 இனங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அரியவகை வண்ணத்துப் பூச்சிகளான பருபலா வெள்ளையன், சிறிய மஞ்சள் புல்வெளியாள், ஜூடி, காட்டுக்களா சிறகன், நான்கு வளையன், சிறிய பரப்பி போன்ற இனங்கள் மலைப்பகுதிகளில் பரவலாக காணப்பட்டன. ஆற்றுப் பகுதிகளில் இரட்டை வால் சிறகன் மற்றும் அந்திச்சிறகன் போன்ற வண்ணத்துப் பூச்சிகள் மரத்தில் இருந்து வடியும் பாலை உண்ணும் காட்சிகள் பதிவாகின.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் எஸ்.கிருத்திகா கூறியது: பச்சமலையில் 2016 மற்றும் 2022-ல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் முறையே 105 மற்றும் 109 இனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்ற ஆய்வில் (கூடுதலாக 17 இனங்கள்) மொத்தமாக 126 வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை நடைபெற்ற 3 ஆய்வுகளிலும் சேர்த்து மொத்தம் 149 இனங்கள் பதிவாகி உள்ளன. தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் 175 இனங்கள் வரை பதிவுசெய்யும் வாய்ப்பு உள்ளது என்றார்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ் கே.ஷ்ராவண்குமார் கூறியது: இயற்கை உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிப்பது வண்ணத்துப்பூச்சிகள் தான். மகரந்த சேர்க்கையில் தேனீ, குளவி, வண்ணத்துப்பூச்சி, வண்டு ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.
ஒரு பகுதியில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகளவு வாழ்ந்தால், அந்தப்பகுதி மாசடையாமல், இயற்கை சமநிலையில் உள்ளதாக கருதலாம். அந்த வகையில் பச்சமலையின் இயற்கை சமநிலையில் உள்ளது. எந்த இடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் இல்லையோ அந்த இடம் மாசடைந்துள்ளது. அந்த இடத்தை இயற்கைக்கு தகுந்தாற்போல மேம்படுத்த வேண்டும் என்றார்.