திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் '100' மணி நேர கெடுபிடியும்... உள்ளூர் மக்களுக்கு நெருக்கடியும்!

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் காவல்துறையினரின் ‘100’ மணி நேர கெடுபிடியால் உள்ளூர் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் விழா கடந்த டிச. 1-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடை பெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த டிச.13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சந்நிதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயர திரு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தை தொடர்ந்து, மறுநாள் (14-ம் தேதி) பவுர்ணமி, இதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை (15-ம் தேதி) விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தன. பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணி என்ற பெயரில் 14 ஆயிரம் காவல்துறையினர், திருவண்ணாமலை மாநகரில் குவிக்கப்பட்டனர். பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்ற பாதையில் சொற்ப எண்ணிக்கையிலும், 18 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் அண்ணாமலையார் கோயில் உள் பகுதி, வட மற்றும் தென் ஒத்தவாட தெரு, மாட வீதி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையார் கோயில் அருகே உள்ள வட மற்றும் தென் ஒத்தவாட தெரு, மாட வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீதிகளில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

இந்த தடுப்புகளை கடந்து வாகனங்கள் நுழைவதை தடுப்பதே, இவர்களது தலையாய பணியாக இருந்தது. மேலும், வட மற்றும் தென் ஒத்தவாட தெரு, இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் தடைகளை ஏற்படுத்தி பொது மக்கள், பக்தர்கள், கடை வைத்துள்ள வணிகர்கள் யாரையும்நடமாட முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை உருவானது. அப்பகுதியில்வசிக்கும் மக்கள், வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட உணர்வை சந்தித்துள்ளனர். காவல் துறைக்கு எதிராக சமூக வலைதளத்தில் வெளியான காட்சிகள், வேதனையுடன் கூடிய வாசகங்கள் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும் பிற வீதிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, வாகனங்கள் செல்வதை அனுமதிக்க முடியாது என கூறி விரட்டினர். வெகு தொலைவு நடந்து செல்லவா முடியும் என கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம், நாங்கள் நடந்து வரவில்லையா? நீங்கள் நடந்து சென்றால் என்ன? என கேள்வி எழுப்பி திருப்பி அனுப்பினர். பல இடங்களில் அதிகார தோரணையில் ஒருமையில் காவல் துறையினர் பேசியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வந்தவர்களை, தொடர்ந்து பயன்படுத்தியதால் அவர்கள் விரக்தியின் உச்சிக்கு சென்றுவிட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, அவர்களிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்த முடியாததால், அப்பாவி மக்களிடம் எதிரொலித்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். எளியவர்களை கண்டால் வலியவர்களுக்கு கொண்டாட்டம் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர் காவல்துறையினர்.

Captionதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்
திருவிழாவில் காவல் துறையினரின் கெடுபிடி
மற்றும் நெருக்கடியை சுட்டிக்காட்டி,
சமூக வலைதளத்தில் வெளியான வாசகங்கள்.

இது குறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில், காவல் துறையினரின் கெடுபிடிகள் அதிகளவில் இருந்தன. அவர்களது மிரட்டல் விடுக்கும் பேச்சு என்பது மக்களை அதிர்ச்சியடைய செய்தது. உள்ளூர் மக்களிடம் அடக்குமுறை கையாளப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டை விட்டு ஏன்? வெளியே வருகிறீர்கள் என கேள்வி கேட்கின்றனர்.

வெளியூர் சென்றுவிடுங்கள் என காவல்துறையினர் கூறியது கொடுமையானது. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கூட எளிதாக அழைத்து செல்ல முடியவில்லை. கோயில் உள்ளே அதிக எண்ணிக்கையில் காவலர்களை அனுமதிக்க கூடாது, மக்களிடமும் மற்றும் பக்தர்களிடமும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எங்கள் தொகுதியின் அமைச்சர் எ.வ.வேலுவின் அறிவுரையை காவல்துறை உயர் அதிகாரிகள் உதாசீனப்படுத்தியுள்ளனர்.

அவசர நிலையை போல் உணர்ந்தோம் தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களை கனிவாக அணுக வேண்டும் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்க உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். குற்றவாளிகளிடம் நடந்து கொள்வது போல் நடந்து கொண்டனர்.

விஐபிக்களை பாதுகாப்பாக கோயில் உள்ளே அழைத்து செல்லவும், அவர்களது வாகனங்கள் தடையின்றி வந்து செல்வதற்காக, இத்தனை கெடுபிடிகள் கட்டவிழுத்து விடப்படப்பட்டுள்ளன. இதில், காவல்துறையின் உயர் அதி காரிகள் குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

அவர்கள் இனத்தை மட்டும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர். அதேநேரத்தில், கடந்த டிச.12-ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை 100 மணி நேரம் நாங்கள் சந்தித்த இன்னல்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அண்ணா மலையார் கோயிலை சுற்றி உள்ள பகுதியில், பல ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை போல் உணர்ந்தோம். இதே போல் வார விடுமுறை நாட்களிலும் காவல் துறையினரின் கெடுபிடி உள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் தொடரக்கூடாது.

யாருக்காக விழா நடைபெறுகிறது கோயில் அருகே குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. வீதிகளும் சிறியளவில் உள்ளது. இதனால், விஐபி வாகனங்கள் உட்பட அனைத்து நிலையில் உள்ளவர்களின் வாகனங்களையும் கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் நிறுத்தி விட வேண்டும். மாடவீதி, வட ஒத்தவாட தெருவில் நிறுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவில்லை, பக்தர்களுக்காக நடைபெறுகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

யாரோ ஒருவருக்காக பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட வேண்டுமா?. இல்லையென்றால், ஆண்டுக்கு ஒரு முறை அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்வை சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மட்டும் நடத்தட்டும். வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காதீர்கள். பல லட்சம் பக்தர்கள் அமைதியாக கிரிவலம் சென்று வீடு திரும்பும் நிலையில், அதிகாரத்தில் உள்ள ஒரு சிலருக்காக, இத்தகைய கெடுபிடிகள் தேவையா? என்பதை தமிழக அரசு உணர வேண்டும்” என ஆதங்கத்துடன் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE