மயிலாடுதுறை | தரங்கம்பாடியில் கடல் சீற்றம்: டேனிஷ் கோட்டை தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம்

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் நேற்று கடுமையான கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில், அலைகள் தொடர்ச்சியாக வந்து மோதியதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டை உள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூ.4.83 கோடி நிதியுதவியுடன் தமிழக சுற்றுலாத் துறை மூலம், 2015-ம் ஆண்டு இக்கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கடல் அரிப்பிலிருந்து கோட்டையை பாதுகாக்கும் வகையில், கோட்டையின் மதில் சுவரிலிருந்து ஏழு அடிக்கு அப்பால், நான்கரை அடி உயரத்துக்கு கோட்டையைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு, அதன்மேல் கம்பி வலைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், வங்ககடலில் குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

தரங்கம்பாடி பகுதியில் ஃபெஞ்சல் புயலின்போது இருந்ததை விட தற்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால், தடுப்புச் சுவரின் ஒரு பகுதியில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், கோட்டையின் மதில் சுவர் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சேதமடைந்த பகுதி.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியது: டேனிஷ் கோட்டை தடுப்புச் சுவரை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க உரிய கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த தடுப்புச் சுவர் அமைக்கும்போதே, அஸ்திவாரமும், தடுப்புச்சுவரும் பலமாக இல்லை எனவும், இது எந்த வகையிலும் கடல் அரிப்பிலிருந்து கோட்டையை பாதுகாக்காது எனவும் கூறினோம்.

மேலும், கோட்டையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையிலும் கடற்கரையில் தூண்டில் வளைவு கருங்கல் குவியல் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தோம். அவ்வாறு செய்யாததால், தற்போது கோட்டையை நெருங்கும் வகையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், டேனிஷ் கோட்டை முன்புறம் உள்ள திடலில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிவதால், அசுத்தம் ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE