புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மேலும் தொகை கேட்பதால் குடியேற முடியாமல் பயனாளிகள் திண்டாடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பக்காட்டில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 120 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது.
இதில், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் வீடின்றி வசிப்போர், கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் வீதம் பங்களிப்புத் தொகை பெற்றுக்கொண்டு 120 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடந்து முடிந்துவிட்டது. இதனால், அனைவரும் புதிய வீட்டில் குடியேறுவதற்கு தயாராகினர்.
இந்நிலையில், ஒவ்வொருவரும் மேலும் ரூ.1.40 லட்சம் செலுத்த வேண்டும் என அலுவலர்கள் கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தொகை செலுத்த பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் வீடு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறவில்லை.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் கூறியதாவது: வீடு இல்லாதவர்கள், மனை இல்லாதவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்கள், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களே இக்குடியிருப்புக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
» விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் பள்ளி விடுமுறை - அழுகிய லட்சக்கணக்கான முட்டைகள்!
» கோவை: திருமணம் செய்து கொள்வதாக இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது
கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பு 120 பேரிடம் இருந்தும் பங்களிப்புத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் வசூலிக்கப்பட்டது. கட்டுமானப் பணி முடிக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு பருவமழைக்கு முன்னதாகவே புதிய வீட்டில் குடியேறலாம் என்ற கனவோடு இருந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மேலும் தலா ரூ.1.4 லட்சம் வீதம் செலுத்தினால்தான் வீடு வழங்கப்படும் என அலுவலர்கள் கூறுகின்றனர்.
கூடுதல் தொகையை பயனாளிகள் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். முதலில் செலுத்திய தொகையையும்கூட வட்டிக்கு வாங்கியே செலுத்தி உள்ளனர். எனவே, கூடுதல் தொகையை வசூலிக்காமல் வீடு வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, “பயனாளிகளிடம் இருந்து தலா ரூ.1 லட்சம் வசூலிக்கப்பட்ட பிறகு, கட்டுமானத்துக்கு கூடுதல் செலவாகி உள்ளதால் கூடுதல் தொகை வசூலிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று குடியிருப்புகள் கட்டப்படும் ஒவ்வொரு இடத்துக்கும் வெவ்வேறு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு தலா ரூ.1.4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தினால் வீடு வழங்கப்படும்’’ என்றனர்.