தூங்கும் துணைக்கோள் நகரம்! - புதுக்கோட்டையில் நடப்பது என்ன?

By KU BUREAU

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 1,603 மனைகளை விற்பனை செய்வதற்கான பணியை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை முள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கால்நடை பராமரிப்பு துறைக்குச் சொந்தமான நிலத்தில் 100 ஏக்கரில், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.56 கோடி மதிப்பில் 1,603 மனைகளுடன் புதிய குடியிருப்பு (துணைக்கோள் நகரம்) உருவாக்குவதற்கான பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வீட்டு மனைகள் பிரிப்பு, குடிநீர், சாலை, தெருவிளக்கு, நுழைவுவாயில் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டும், மனை விற்பனை பணி தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியதாவது: புதுக்கோட்டையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை உள்ளது. இப்பகுதி அடர்ந்த காடாக இருப்பதால், புதிய குடியிருப்பு உருவாக்குவதற்கான பணி கடந்த ஆட்சியில் தொடங்கியது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மனை விற்பனை செய்யும் பணியைத் தொடங்கவில்லை.

இதனால் இப்பகுதியை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் திறந்தவெளி மதுபானக் கூடம்போல பயன்படுத்தி வருகின்றனர். மதுபாட்டில்களை உடைத்து அங்கேயே போட்டு செல்கின்றனர். மேலும், மனைப்பகுதி முழுவதும் புதர் மண்டி உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், இரண்டு நுழைவுவாயில் பகுதிகளிலும் முள்செடிகளை வைத்து அடைத்துள்ளனர். எனவே, மனை விற்பனை பணியை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் கூறியதாவது: வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மனை பிரித்தல், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. மனை விற்பனை செய்வதற்கு விண்ணப்பங்களை நேரில் பெறாமல் இணையதளம் வாயிலாக பெற்று, பரிசீலனை செய்து விற்பனை செய்வதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்பணி முடிவுற்றதும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மனை விற்பனை பணி தொடங்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE