மழைப்பொழிவு நாட்களிலும் தருமபுரி நல்லம்பள்ளி அளவீட்டு மையத்தில் ‘பூஜ்யம்’ அறிக்கை!

By எஸ்.ராஜாசெல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளியில் மழை அளவீட்டு மையம் இருந்தபோதும் நடப்பாண்டில் தொடர்ந்து பூஜ்யம் மழையளவே தெரிவிக்கப்பட்டு வருவதால் நல்லம்பள்ளி வட்டார விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அரசு சார்பில் பல இடங்களில் மழைப் பொழிவை அளவிடும் மழைமானி நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், நல்லம்பள்ளி ஆகிய 9 மையங்கள் முக்கிய அளவீட்டு மையங்களாகக் கருதப்படுகின்றன.

எனவே, இந்த மையங்களின் மழையளவு தான் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. ஆனால், நடப்பு ஆண்டில் மழைக்காலம் தொடங்கியது முதலே நல்லம்பள்ளி பகுதியில் மழைப்பொழிவு பூஜ்யம் என்றே அரசுத் துறை சார்பில் அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தின் இதர மழை அளவீட்டு மையங்களில் பதிவாகும் உண்மையான மழையளவு ஒவ்வொரு நாளும் நாளிதழ்கள் மூலம் தெரிய வருகிறது.

ஆனால், நல்லம்பள்ளி அளவீட்டு மையத்தில் மட்டும் தொடர்ந்து பூஜ்யம் அளவாகவே மழையளவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் மழைப் பொழிவு இல்லாத நாளில் பூஜ்யம் அளவு என அறிக்கை வழங்கப்படலாம். ஆனால், கனமழை பெய்யும் நாட்களிலும் பூஜ்யம் அளவு என்றே அறிக்கை வழங்கப்படுவதாக தெரிகிறது.

ஓராண்டாக நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு பூஜ்யம் அளவாகவே இருந்திருந்தால் இந்த வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிப் படைந்திருக்கும். அதேபோல, வனப்பகுதிகளில் செடி, கொடி, மரம் உள்ளிட்ட தாவரங்கள் முழுமையாக கருகியிருக்கும்.

இங்குள்ள மழைமானியில் பழுது எதுவும் ஏற்பட்டிருந்தால் அதை சீரமைத்து உண்மையான மழையளவை மாவட்ட மக்கள், குறிப்பாக நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE