தருமபுரி: பருவமழை முடியும் நிலையிலும் நீரின்றி வறண்டு காணப்படும் தும்பலஅள்ளி அணை!

By எஸ்.ராஜாசெல்லம்

தருமபுரி: வடகிழக்கு பருவமழை முடியவுள்ள நிலையில் தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணை தண்ணீரின்றி வறண்டு கிடப் பதால் அப்பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சின்னாறு (பஞ்சப்பள்ளி), கேசர்குளிஹல்லா, தும்பல அள்ளி, நாகாவதி, தொப்பையாறு, வாணியாறு, வரட்டாறு, ஈச்சம்பாடி என மொத்தம் 8 அணைகள் உள்ளன.

இவற்றில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஈச்சம்பாடி அணை 3 மாதங்களுக்கு முன்பு நிரம்பியது. அருகிலுள்ள மலைகளில் இருந்து தண்ணீர் பெறும் மற்ற அணைகள் படிப்படியாக நிரம்பி வந்தன. இந்நிலையில், வாணியாறு, வரட்டாறு ஆகிய அணைகள் சில வாரங்களுக்கு முன்பே நிரம்பி விட்டன.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தொப்பையாறு அணையும் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை முடியும் தருணத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை மாவட்டத்தில் 4 அணைகள் நிரம்பியுள்ளன. 50 அடி உயரம் கொள்ளளவு கொண்ட சின்னாறு (பஞ்சப்பள்ளி) அணையில் நேற்றைய நிலவரப்படி 44.94 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. அதேபோல, 25.26 அடி உயரம் கொள்ளளவு கொண்ட கேசர்குளிஹல்லா அணையில் 16.40 அடி தண்ணீர் நிறைந்துள்ளது.

இவைதவிர, 24.60 அடி உயரம் கொள்ளளவு கொண்ட நாகாவதி அணையில் நேற்றைய நிலவரப்படி 7.71 அடி வரை மட்டுமே தண்ணீர் நிறைந்துள்ளது. 14.76 அடி உயரம் கொள்ளளவு கொண்ட தும்பலஅள்ளி அணை நீரின்றி முழுமையாக வறண்டு கிடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்ட நிலையிலேயே காணப்பட்ட தும்பலஅள்ளி அணை கடந்த ஆண்டில் முழுமையாக நிரம்பியது.

இதனால், இந்த அணையின் பாசனப்பரப்பு பகுதி விவசாயிகள் அப்போது உற்சாகமும், நிம்மதியும் அடைந்தனர். ஆனால், நடப்பு ஆண்டில் பருவ மழை முடியவுள்ள நிலையிலும் தும்பலஅள்ளி அணை வறண்டு கிடப்பது அப்பகுதி விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘தும்பலஅள்ளி அணைக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டில்தான் அணை நிரம்பும் அளவு மழைப்பொழிவு இருந்தது.

தற்போது அணையிருந்தும் வறண்டே காணப்படுவது விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது. எனவேதான், தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை, எண்ணேகொள் புதூர் பகுதியில் இருந்து கால்வாய் மூலம் தும்பல அள்ளி அணைக்கு கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி பாசனப் பரப்பு விவசாயிகளின் வேதனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென தொடர் கோரிக்கை வைத்து வருகிறோம்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE