மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான நான்கு வழிச்சாலை பணி - 1,400 மரங்களை அகற்ற முடிவு

By டி.ஜி.ரகுபதி

கோவை: மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான 38 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.250 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக சுமார் 1,400 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் அதிக வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மேட்டுப்பாளையம் - அன்னூர் - அவிநாசி சாலை முக்கியமானதாகும்.

மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்தில் இரு வழிப்பாதையாக இச்சாலை உள்ளது.திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்கள், கோவை நகருக்குள் வராமல் இந்த வழியாக செல்கின்றன. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மேட்டுப்பாளையம் - அன்னூர் - அவிநாசி வழித்தடத்தில் சென்று வருகின்றன.

குறிப்பாக, கோடை காலங்கள், பொது விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த சாலையை மையப்படுத்தி ஏராளமான குடியிருப்புப் பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை அதிகபட்சமாக 23 அடி அகலம் கொண்டதாகும்.குறுகிய சாலையாக இரு வழித்தடமாக உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்க்க, 4 வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வந்தனர். சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஏற்கெனவே கோவை- மேட்டுப்பாளையம் சாலை, கோவை- அவிநாசி சாலை, கோவை- பொள்ளாச்சி சாலைகளில் பசுமையாக இருந்த அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு விட்டன. தற்போது, மேட்டுப்பாளையம்- அவிநாசி வழித்தடத்திலும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது கவலை அளிக்கிறது. இருப்பினும், இதற்கு ஈடான மரங்களை வளர்ப்பதில் நெடுஞ்சாலைத் துறை அதிக அக்கறை யுடன் செயல்பட வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், மேட்டுப்பாளையம் - அன்னூர் - அவிநாசி வழித்தடமான 38 கிலோ மீட்டர் தூரம் ரூ.250 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. மாநில அரசின், ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.146 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு சாலை விரிவாக்கம் செய்யப்படும்போது, 16 இடங்களில் உள்ள தரைப்பாலங்கள் அகலப்படுத்தப்படும். 6 இடங்களில் புதிய தரைப்பாலங்கள் கட்டப்படும். தற்போது திட்டப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். அதில் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலைப் பெற்று திட்டப் பணிகள் தொடங்கப்படும்.

இத்திட்டத்துக்காக பெரிய அளவில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டியதில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவாக முடிக்கப்படும். மேலும், இத்திட்டப்பணிக்காக மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள ஏறத்தாழ 1,400 மரங்கள் அகற்றப்பட உள்ளன. அகற்றப்படும் மரத்துக்கு ஏற்ப பத்து மடங்கு மரங்கள் புதிய இடத்தில் நடவு செய்து வளர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் வட்டத்துக்குட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகர் கூறும்போது, ‘‘சிக்காரம் பாளையம் ஊராட்சி சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். நெடுஞ்சாலைத் துறையினர் கேட்டுக் கொண்டால், மரக்கன்றுகளை வழங்கவும், அவற்றை பராமரிக்கவும் தயாராக உள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE