துணை முதல்வர் உத்தரவிட்டும் தாம்பரம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை!

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி, கஸ்பாபுரம், கிருஷ்ணா நகர், கணேஷ் நகர் பிரதான சாலையில், கடந்த மாதம் அக்.14, 15-ம் தேதிகளில் பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் இதுகுறித்து “எக்ஸ்” தளத்தில் வீடியோ வெளியிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பதிவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு “டேக்” செய்திருந்தார். இதை தொடர்ந்து துணை முதல்வர் கடந்த அக்.16-ம் தேதி அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் அகரம் ஏரிக்கு மழைநீரை கொண்டு செல்ல கால்வாய் அமைக்க திட்டம் தயாரித்து மதிப்பீட்டை அனுப்புமாறு செங்கல்பட்டு ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென துணை முதல்வர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பதுவஞ்சேரி, மப்பேடு, புதூர், கஸ்பாபுரம் பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர், கஸ்பாபுரம் தாங்கல் ஏரிக்கு சென்று, அங்கிருந்து அகரம் ஏரிக்கு செல்லும் வகையில் ஏற்கெனவே நீர் வழித்தடம் உள்ளது. தற்போது கால்வாய், தாங்கல் ஏரி ஆகிய பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது.

அரிகிருஷ்ணன்

இந்நிலையில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கஸ்பாபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் கூறியதாவது: ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் குடியிருப்புகளை சூழ்வதோடு, சாலை, காலி மனை என பல இடங்களில் சுமா ஒரு மாத காலம் தண்ணீர் தேங்கி நிற்கும்.

தண்ணீர் முற்றிலும் வடிவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும். இந்நிலையில், சமீபத்தில் துணை முதல்வர் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டது நம்பிக்கையை ஏற்படுத்தியது. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அவர் உறுதியளித்து சென்ற நிலையில், அதிகாரிகள் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பாரபட்சம் காட்டி, பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.

அரசின் ஆவணத்தில் உள்ள அளவீடுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், உள்ளூர் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். துணை முதல்வர் வந்து சென்றதால் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, துணை முதல்வரின் அறிவுரைப்படி முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுபற்றி வருவாய் துறையினர் கூறியதாவது: ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தாங்களே தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் கேட்டார்கள். அதனால் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனில் அவை கண்டிப்பாக அகற்றப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE