ஆரஞ்சு அலர்ட் எதிரொலி: நாகையில் விடிய விடிய குறுவை அறுவடை!

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகை மாவட்டதுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இரவு நேரத்திலும் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவ.27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டத்துக்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

ஏற்கெனவே பெய்த தொடர் மழையால், நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன. மீண்டும் மழை பெய்தால், நெற்கதிர்களில் இருந்த நெல்மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் தற்போது மந்தமான வானிலை நீடித்ததால், கீழ்வேளூர், ஆழியூர், சிராங்குடி, புலியூர், ராமர் மடம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அறுவடை இயந்திரம் மூலம் இரவோடு இரவாக நெல் அறுவடை பணிகளை மேற்கொண்டனர். இதில், ஏக்கருக்கு 30 மூட்டை
விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு, இந்த மழையால் 10 மூட்டை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், நெற்கதிர்கள் மழையில் நனைந்துள்ளதால் மேலும் 2 மூட்டை சேதாரம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE