கோவை ‘டைடல் பார்க்’ சாலையில் எரியாத தெருவிளக்குகளால் விபத்து அபாயம்

By இல.ராஜகோபால்

கோவை: கோவை டைடல் பூங்கா செல்லும் விளாங்குறிச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் சீரான முறையில் பராமரிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக, ஹோப்காலேஜ் பகுதியில் வசிக்கும் முருகேசன் என்ற வாசகர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதிக்கான தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது: கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை செல்ல விளாங்குறிச்சி சாலை உதவுகிறது. ஹோப்காலேஜ் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி அருகே தொடங்கி டைடல் பார்க் வளாகம் வரை விளாங்குறிச்சி சாலையின் இருபுறங்களிலும் அலங்கார விளக்குகள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை சீரான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் சில நாட்கள் எரிவதும், சில நாட்கள் அனைத்து விளக்குகளும் எரியாமல் இருப்பதுமாக என மாறி மாறி காட்சியளிக்கின்றன. ஏற்கெனவே விளாங்குறிச்சி சாலையில் அதிக போக்குவரத்து காணப்படும் நிலையில், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இந்த சாலையில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி செல்லப் படுகின்றனர்.

அனைத்து பேருந்துகளும் டைடல் பூங்கா நுழைவுவாயில் வரை சென்று திரும்பி செல்கின்றன.சாலை விபத்துகளை தவிர்க்க இந்த சாலையில் தெரு விளக்குகளை சீரான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கோவை டைடல் பூங்கா செல்லும் விளாங்குறிச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE