நீலகிரி கிராமங்களில் சிலிண்டர் விநியோகத்தில் சுரண்டல்!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவு சமைக்க சமையல் எரிவாயு சிலிண்டர் அவசியம். கிராமப்புறங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த வாய்ப் பிருந்தாலும், நகர்ப்புறங்களில் புகை, விறகு தட்டுப்பாடால், மக்கள் சமையல் எரிவாயு அடுப்புக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உஜ்வாலா திட்டத்தை கொண்டு வந்து ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பை மத்திய அரசு வழங்கியது.

மேலும், மகளிர் புகையுடன் போராடக்கூடாது என்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டதால், கிராமப்புறங்களிலும் மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாறிவிட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணை தொட்டாலும், சிலிண்டரை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனங்கள், கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்து நுகர்வோரை சுரண்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோகரன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் பயன்பாடு அதிகம். மலைப்பகுதி என்பதால் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், தண்ணீரைக்கூட சூடாக்கி குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது, மண்ணெண்ணெய் விநியோகத்தை அரசு குறைத்துள்ளது.

மேலும், விறகு விற்பனை செய்யப்படாததால், சமையல் எரிவாயுவை நம்பி மக்கள் இருக்கின்றனர். நீலகிரி மாவட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர் சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது. சமையல் எரிவாயு விநியோகிப்பாளர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்டு சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்க வேண்டும். சரியான எடையை உறுதி செய்து வழங்க வேண்டும். வாயு கசிவு இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு வீடுகளுக்கு கொண்டு வந்து தருவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. ஆனால், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் பொது இடத்தில் வண்டியை நிறுத்தி சிலிண்டர் வழங்கப்படுகிறது. எனவே, நுகர்வோர் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக பணமும் வசூலிக்கப்படுகிறது. எரிவாயு விநியோகிப்பாளர்களுடன் நடக்கும் நுகர்வோர் குழு ஆலோசனைக் கூட்டங்களில் பலமுறை வலியுறுத்தப்பட்டும், இந்த நிலை தொடர்கிறது. எனவே, இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, விதிமுறைகளுக்குட்பட்டு வீடுகளுக்கு கொண்டு வந்து எரிவாயு உருளைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

ஊதியம் இல்லை: இந்நிலையில், சிலிண்டர் தூக்கும் தொழிலாளர்களுக்கு முகவர்கள் சொற்ப ஊதியம் மட்டுமே வழங்குவதால், நுகர்வோரிடம் சிறிய தொகை பெறுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும்போது, ‘‘சிலிண்டர் தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் என்பதை முகவர்கள் வழங்குவதில்லை.

சொற்ப தொகைதான் அளிக்கின்றனர். உடல் வலியுடன் நுகர்வோர் வீட்டுக்கே சிலிண்டர்களை கொண்டு சென்று வழங்குகிறோம். நகர்ப்புறங்களில் அதிகபட்சமாக அடுக்கு மாடி வீடுகள் இருப்பதால், பல படிகளை ஏறி, இறங்கி சிலிண்டர் விநியோகிக்கிறோம். இதற்காக நுகர்வோர் ரூ.10, ரூ.20 என அளிக்கின்றனர். ஒரு நாளைக்கு 100 சிலிண்டர் விநியோகித்தால் ரூ.500 கிடைக்கும். இந்த தொகையை வைத்தே எங்கள் வாழ்வாதாரம் உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE