பூவன் ரக வாழைப்பழம் விலை வீழ்ச்சி - தஞ்சை விவசாயிகள் வேதனை

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தொடர் மழையின் காரணமாக, பூவன் ரக வாழைத்தார்களை வாங்க யாரும் முன்வராத காரணத்தால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வெட்டுக் கூலிக்கு கூட கட்டுபடியாகாததால் வாழை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி படுகைப் பகுதியான திருக்காட்டுப்பள்ளி, கோவிலடி, வளப்பக்குடி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இதில், திருவையாறு பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் பெரும்பாலும், பூவன் ரக வாழையை பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் கிலோ ரூ.60-க்கு விற்று உச்சத்தில் இருந்த பூவன் ரக வாழைப்பழம், தற்போது கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை என கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது பருவமழையின் காரணமாக பொதுமக்கள் பலரும் இருமல், காய்ச்சல், சளி போன்ற வற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், பூவன் ரக வாழைப்பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.மேலும், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் அடைமழைக்காலமாக இருப்பதால், சுபமுகூர்த்த தினங்கள் குறைவாக இருக்கும். எனவே, பூவன் ரக வாழைப்பழம் பயன்பாடும் குறைவாக இருக்கும். இதனால் வியாபாரிகளும் பூவன் ரக வாழைப்பழத்தை வாங்குவதை விரும்புவதில்லை.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வாழை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எம்.மதியழகன் கூறியதாவது: திருவையாறு பகுதியில் அதிகளவு வாழையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் பூவன் ரகத்தை தேர்வு செய்து பயிரிடுவதால், வாழைப்பழம், வாழை இலை, வாழை நார் ஆகியவை கிடைக்கின்றன.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்: பொதுமக்கள் பெரும்பாலும் பூவன் ரக வாழைப் பழங்களை விரும்பி உட்கொண்டு வருகின்றனர். ஆனால் மழைக்காலத்தில் மட்டும் அதை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது அறுவடை செய்யப்படும் வாழைப்பழங்கள் விலை போகாமல் தேக்கமடைந்துள்ளன. கடந்த மாதம் வரை ஒரு தார் ரூ.300 முதல் ரூ.600 வரை விலைக்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.30 முதல் ரூ.100 வரை மட்டுமே விலை போகிறது. இது, வெட்டுக் கூலி, வண்டி வாடகை ஆகியவற்றுக்கு கூட கட்டுபடியாகவில்லை.

திருவையாறு பகுதியில் தனியார் ஏலதாரர்களை நம்பியே வாழை விவசாயிகள் இருக்க வேண்டியிருப்பதால், இங்கு அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஏற்படுத்தி வாழை ஏலம் நடைபெற அரசு வழிவகை செய்ய வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அருகே மன்னார்சமுத்திரத்தில் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

வாழைப்பழங்களை பயன்படுத்தி ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்த பகுதியில் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் தான் வாழை விவசாயிகளை எதிர்காலத்தில் பாதுகாக்க முடியும் என்றார்.

பழங்கள் வீணாகிவிடும்: இதுகுறித்து தஞ்சாவூர் காமராஜர் சந்தை வாழைப்பழங்கள் மொத்த வியாபாரி பி.காமராஜ் கூறியது: கடந்த மாதம் ஆயுத பூஜை வரை பூவன் ரக வாழைப்பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழைக்காலம் என்பதால் விலை குறைந்துள்ளது. அதிகமாக வாங்கி இருப்பு வைத்தால், ஒரு வாரம் கூட தாங்காமல் பழங்கள் வீணாகிவிடும் என்பதால், வியாபாரிகளும் குறைந்தளவே கொள்முதல் செய்து வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE