செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனமாஞ்சேரி ஊராட்சியில், 2018ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ வரலட்சுமி சார்பில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடம் அமைப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் ஓராண்டாக நடந்து முடிந்தன. ஆனால் இதுவரை சமுதாய நலக்கூடத்தை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
மேலும், கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்துக்கு கூரை அமைத்தல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, கடந்த ஆண்டு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகளும் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும், சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் கட்டிடம் பழுதாகி, பொதுமக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய கூடம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரையில் பயன்பாட்டுக்கு வராததால், இல்ல நிகழ்ச்சிகளை தனியார் மண்டபத்தில் அதிக பணம் செலவழித்து நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம். சமுதாய கூடத்தை முடக்கி வைத்து மக்கள் வரிப் பணம் ரூ.46 லட்சத்தை வீணாக்குகின்றனர்.
இங்கு, ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பாமகவை சார்ந்தவர். இதனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினர் அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்து கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் தடுப்பதாகவும் தெரிகிறது. எனவே, தமிழக அரசு சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» சென்னை - அண்ணா ஆர்ச் மேம்பாலத்தில் விரிசல், பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
» காஞ்சிபுரம்: குப்பைமேட்டில் கிடக்கும் கல்தூண்கள், சிலைகள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?
ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன் கூறியது, “செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 கட்டங்களாக நிதி ஒதுக்கீடு செய்து, சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது. தரை தளத்தில் திருமணக்கூடமும், முதல் தளத்தில் உணவு கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறோம். விரைவில் திறப்பார்கள் என நம்புகிறோம்.
மக்கள், சுப நிகழ்ச்சிக்காக தனியார் மண்டபங்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக பெரும் தொகையை எங்கள் பகுதி மக்கள் செலவிடுகின்றனர். சமுதாய நலக்கூடத்தை திறந்தால் நடுத்தர மற்றும், ஏழைகள் குறைந்த செலவில் சுபகாரியத்தை முடித்து விடுவார்கள். எனவே சமுதாய நலக்கூடத்தை திறந்து சுபகாரியங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் மக்களின் கோரிக்கை ஆகும்” என்றார்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ம.வரலட்சுமி கூறியதாவது, “தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2018-19ம் ஆண்டில் ரூ.30 லட்சம், 2023-24ம் ஆண்டு ரூ.16 லட்சம் என 2 கட்டங்களாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. தற்போது பணிகள் முடிவு பெற்றுள்ளன. இந்த மாத இறுதிக்குள் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்.