1+ இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றி கட்டணம் வசூல் - திருப்பத்தூர் மக்கள் குற்றச்சாட்டு

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே வீட்டில் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றிணைத்து ஒரே மின் இணைப்பாக மாற்றி அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் பணிகளை மின்வாரியம் தொடங்கியுள்ளது. இதில், ஒரே வீட்டில் உள்ள வாடகை குடியிருப்புகளிலும் ஒரே மின் இணைப்பாக கணக்கிட்டு மின்கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஏற்பட்டு வரும் தேவையற்ற மின் இழப்புகளை தடுக்க ஒரே வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்று மின் இணைப்புகள் இருந்தால், அதை கணக்கீடு செய்வதில் மின்வாரியம் சமீபத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யப்படும். இந்த நடைமுறை கடந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான, மின்வாரியத்தில் மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரே இணைப்பாக மாற்றி கட்டணம் வசூலிக்கும் முறை அமல் தற்போது, ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேநேரம் ஒரு வீட்டுக்கு இரண்டு மின் இணைப்புகள் இருந்தால் தலா 100 யூனிட் என 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், ஒரே வணிக கட்டிடங்களுக்கு இரண்டு மின் இணைப்புகள் இருக்கும் போது அந்நிறுவனங்களுக்கு மின் கட்டணமும் குறைவாக வரும். இதனால், மின்வாரியத்துக்கு அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்தது.

எனவே, இத்தகைய மின் இணைப்புகளைக் கண்டறிந்து ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதற்கான மின்கட்டணம் கணக்கிட்டு தொகையை வசூல் செய்ய மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி, ஒரே வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்று மின் இணைப்புகள் இருந்தால், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்களுக்கு மின் கட்டணம் கணக்கிடவும், வணிக நிறுவனங்களில் இரண்டு இணைப்பு இருந்தால் அதில் பதிவான யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது.

இதனால், மின்வாரியத்துக்கு ஏற்பட்டு வந்த நீண்டகால வருவாய் இழப்பு தடுக்கப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மின்வாரியத்தின் இந்த தடாலடி முடிவு வணிக நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், வீட்டின் உரிமையாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்வாரியத்தின் புதிய கணக்கீடு பணிகள்(ரீடிங்க்) இந்த மாதம் தொடங்கி உள்ளன. இதில், ஒரே வீட்டில் வாடகை குடியிருப்புகள் தனித்தனியாக உள்ள வீடுகளின் மின் இணைப்புகளையும் ஒன்றாக இணைக்கும் மின்வாரிய ஊழியர்கள், அதற்கான மின் கட்டணத்தை மொத்தமாக ஒரே பில் தொகையாக செலுத்த வேண்டும் என கணக்கிட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் மின் கணக்கீடு (ரீடிங்க்) பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவருகின்றன. மின் கணக்கீடு செய்ய வரும் மின்வாரிய ஊழியர்கள் ஒரே வீட்டில் வாடகை குடியிருப்புகள் இருந்தால் அங்கு பதிவான மின்பயன்பாட்டையும், வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பில் ஒன்றாக சேர்ந்து மொத்தமாக ஒரே யூனிட் என சேர்த்து, அதில் 100 யூனிட் கழித்து மீதியுள்ள மொத்த யூனிட்டுக்கும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கணக்கிடுகின்றனர்.

இதனால், வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் எவ்வளவு தொகையை வசூலிக்க முடியும். இதனால், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும், வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே பெரும் குழப்பம் ஏற்படுகிறது. ஏற்கெனவே, மின்கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள புதிய திட்டத்தால் மின் நுகர்வோர் மேலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மாற்று வழிகளை மின்வாரியம் தெரிவிக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மின்பகிர்மான கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒரே வீட்டில் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்கள் உள்ள வீடுகளில் மின் இணைப்புகள் ஒன்றாக இணைப்பது இல்லை. தனித்தனியாக தான் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

அதேநேரத்தில், ஒரே வீட்டில் தந்தை கீழ் தளத்திலும், மகன், மகள் அல்லது குடும்பத்தார் மேல் தளத்தில் இருந்து அவர்கள் தனித்தனியாக மின் இணைப்பு பெற்றிருந்தாலும் அந்த மின் இணைப்புகள் மட்டும் ஒன்றாக கணக்கிடப்பட்டு, அதில் 100 யூனிட் கழித்து மீதியுள்ள மின்பயன்பாடு ஒன்றாக கணக்கிடப்படும். இது தொடர்பான அரசாணை ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறையை தான் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதில், மின்நுகர்வோர்களுக்கு குழப்பம் ஏற்பட்டாலோ அல்லது ஒரே வீட்டில் வாடகை குடியிருப்புகள் இருந்து அங்கு ஒரே மின் இணைப்பாக கணக்கீடு செய்து மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பான கடிதத்தை அந்தந்த பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE