ஓசூர் பகுதியில் சட்ட விரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை - நடப்பது எப்படி?

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரில் சட்ட விரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் நகரான ஓசூரில் தள்ளுவண்டி உணவகங்கள், பலகார விற்பனைக் கடைகள் மற்றும் பெரிய உணவகங்கள், சில்லி சிக்கன் கடைகளில் வணிக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓசூர் நகரில் சிலர் காஸ் அடுப்பு பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் நடத்தி வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை: இக்கடைகளில் சட்டவிரோ தமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இங்கு சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கி வந்து, அதனை பதுக்கி, மோட்டார் மூலம் சிறிய சிலிண்டர்களில் அடைத்து வணிக கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: ஓசூர் மற்றும் குமுதேப்பள்ளி, தர்கா, அரசனட்டி, சின்னஎலசகிரி, காமராஜர் நகர், கோவிந்த அக்ரஹாரம், பேகேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காஸ் அடுப்பு பழுது பார்க்கும் கடைகளில் பெரிய குடோன்கள் வைத்து, அங்கு சட்டவிரோதமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி வந்து அதனை சிறிய காஸ் சிலிண்டர்களில் நிரப்பி வணி நோக்கத்தில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சிலிண்டர்களில் நிரப்பும் எரிவாயு எடை குறையாகவும் உள்ளது.

தனியார் சிலிண்டர்கள்: குறிப்பாக இக்கும்பல் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் எரிவாயு சிலிண்டர்களை வாங்கி வந்து சிறிய மற்றும் பெரிய சிலிண்டர்களில் சட்டவிரோதமாக நிரப்பி அதற்கு போலியாக சீல் வைத்து, ஒரு கிலோ காஸ் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர்.

மேலும், இதுபோன்ற குடோன்களில் 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை ஒரே இடத்தில் பாதுகாப்பின்றி அடுக்கி வைத்துள்ளனர். ஒரு சிலிண்டரிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றும்போது, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏமாறும் மக்கள்: இக்கும்பலிடமிருந்து துரித உணவகங்கள், பானிப்பூரி கடைகள், தேனீர் கடைகள், பலகாரக் கடைகள் மற்றும் வெளியூரிலிருந்து தனியாக தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகளவில் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அரசு சார்பில் பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு விற்பனை டீலர்களிடம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால், சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களிடம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிலிண்டர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இச்சிலிண்டர் விற்பனை மூலம் இக்கும்பலுக்கு மாதம்தோறும் பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஓசூர் பகுதியில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி, சிறிய சிலிண்டர்களில் நிரப்பி, விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்: இதுதொடர்பாக ஓசூர் வட்ட வழங்கல் அலுவலர் கூறும்போது, “ஓசூரில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து தனியார் நிறுவன எரிவாயு சிலிண்டர்களை வாங்கி வருகின்றனர். இதைத் தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், இதுபோல விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE