நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணியில் 60+ இடங்களில் கழிவுநீர் கலப்பு!

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: "தாமிரபரணி பொதிகை மலையில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் கடலில் கலக்கிறது. 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பதுடன் 3 போகம் விளைய வைக்கும் அட்சய பாத்திரமாகவும் திகழ்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களை இயக்க உதவியாக இருக்கும் நல்ல நீர் தரும் விருட்சம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தாமிரபரணி நதி பல்வேறு காரணிகளால் பாழாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரையோர கிராமங்களில் உள்ள கழிவுநீர் தாமிரபரணியில் கலக்கும் காரணத்தால் குட்டி கூவம் நதியாக மாறி வருகிறது.

நதியில் பெருகும் மாசு மக்களுக்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. தாமிரபரணியிலிருந்து தண்ணீர் பெறும்கால்வாய்களின் கரையில் உள்ளபாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபால சமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், ஆத்தூர்என வழிநெடுக உள்ள பெருநகரங்களின் கழிவுகள் கால்வாய் அல்லது ஆற்றில் கலந்து மாசுபடுத்துகிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை உள்பட பல திட்டங்களை தீட்டியும் தாமிரபரணி நதிக்குள் பாய்ந்தோடும் சாக்கடையை கட்டுப்படுத்த இயலவில்லை.

செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாமிரபரணியில் சாக்கடை கலக்க கூடாது, கரையோரம் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. அதன்படி சாக்கடையை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித்துறை மற்றும் மண்டபங்களை இந்து அறநிலையத்துறையினர் சீரமைக்க வேண்டும் என தீர்பபு அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 7 மாதங்களாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் இந்த தீர்ப்பு மீது எடுத்த நடவடிக்கை என்ன,என்று திருநெல்வேலி மாநகராட்சி, மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மீது கேள்வி கள் எழுப்பினர்.

தற்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 5-ம் தேதி நெல்லைமாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி,வரும் 2025 செப்டம்பர் மாதத்துக்குள் தாமிரபரணியில் சாக்கடை நீர் கலக்க விடாமல் நிறுத்தி விடுவோம் என்றார்.

ஆனால் அவரது பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் இன்று தாமிரபரணியில் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பற்ற செயலால் வண்ணார்பேட்டையில்
தாமிரபரணியில் நேரடியாக கழிவுநீர் விடப்படுகிறது

உயர் நீதிமன்ற மதுரை கிளை போடும் கிடுக்குபிடியால் தாமிரபரணியில் சாக்கடை கலப்பதை கட்டுப்படுத்த முடியுமா என கேள்வி எழும்பியுள்ளது. ஆனால், முடியும் என தாமிரபரணி, ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நம் தாமிரபரணி அமைப்பின் நிர்வாகி சாமி நல்லபெருமாள், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கூறியதாவது:

தாமிரபரணி ஆற்றில் பாதாள சாக்கடை மூலம் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீரை ராமையன்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 8 குட்டைகள் அமைத்து தேக்கி வைத்துள்ளனர். இந்த கழிவுநீர் தானே சுத்தப்படுத்தப்படும் என்றுகூறினார்கள்.

ஆனால், சாக்கடை கழிவுநீர் ஒரு சொட்டு கூட சுத்தகரிக்கப்படாமல் அப்படியே அங்கிருந்து வெளியேறி ஒரு நொடிக்கு பல நூறு லிட்டர் சாக்கடை கழிவுநீர் கோடகன் கால்வாயில் கலக்கிறது. இங்கிருந்து சத்திரம் புதுக்குளம் உள்பட 8 குளங்களில் தேங்கி பாழ்படுத்துகிறது. பின்னர் சாக்கடை நீர் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தாமிரபரணியில் சாக்கடை கலக்கிறது.

அரபு நாடுகளில் குவைத், துபாய் போன்ற நகரங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை சுத்திகரித்து பின்னர் அந்த நீரைகங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய் யலாம். இந்த பணியை முதலில் சீர்செய்தால் தாமிபரணியில் சாக்கடை கலக்கும் பிரச்சினை 60 சதவீதம் தீர்ந்து விடும்.

மேலப்பாளையம் அருகே தாமிரபரணி கரையில் சரியான திட்டமிடலின்றி
கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டி உடைந்து கழிவுநீர் ஆற்றில் பாய்கிறது.

அடுத்த கட்டமாக மாநகராட்சி பகுதியில் தாமிபரணியில் நேரடியாக சாக்கடை கலக்கும் 17 இடங்களிலும் சுத்திகரிப்பு ஆலை அமைத்து, அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை ஆற்றங்கரையில் உள்ள மரங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம். மேலும், வாறுகால்கள் வழியாக கால்வாய்களில் விடப்படும் சாக்கடை தண்ணீரை சுத்தப்படுத்தி, வீணாக்காமல் விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.

தாமிரபரணி ஆற்றின் கீழுள்ள 11 கால்வாய்களும் அதன் கரையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மெத்தனத்தால் சாக்கடையாக மாறி விட்டது. எனவே இதை சீர் செய்ய முதல் கட்டமாக ஒவ்வொரு பேரூராட்சியிலும் தண்ணீரை சுத்திகரிக்க ஆலைகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் கடலில் கலக்கிறது. 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பதுடன் 3 போகம் விளைய வைக்கும் அட்சய பாத்திரமாகவும் திகழ்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களை இயக்க உதவியாக இருக்கும் நல்ல நீர் தரும் விருட்சம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தாமிரபரணி நதி பல்வேறு காரணிகளால் பாழாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரையோர கிராமங்களில் உள்ள கழிவுநீர் தாமிரபரணியில் கலக்கும் காரணத்தால் குட்டி கூவம் நதியாக மாறி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE