உளுந்தூர்பேட்டையில் பயன்பாடின்றி உள்ள விமானப்படைத் தளம் சரக்கு முனையமாக மாறுமா?

By ந.முருகவேல்

2-ம் உலகப் போரின் போது தோற்று விக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை விமானப்படைத் தளத்தை விமான சரக்கு முனையம் மற்றும் பைலட்டுகளுக்கான பயிற்சித் தளமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் மூண்ட போது, ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த சென்னை மாகாணத்தில், அமெரிக்காவின் விமானப் படையை எதிர்கொள்ள அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம், தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த உளுந்தூர்பேட்டையில் 400 ஏக்கர் பரப்பளவில் கூட்டல் குறியீட்டில் விமானப்படை தளம் ஒன்றை உருவாக்கியது.

கிழக்கு மேற்கும் ஆக 1.5 கி.மீ, வடக்குத் தெற்காக 2 கி.மீ நீளத்துக்கு விமான ஓடு தளம் அமைக்கப்பட்டது. இந்த விமான தளத்தை ஒட்டி சுமார் 100 பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டன. போர் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவும் விடுதலை பெற்றது. அதன் பின் இந்த விமானதளம் பயன்பாடின்றி இருந்து வந்தது.

இந்த நிலையில் 1957-ம் ஆண்டு நெய்வேலிபழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவான போது, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நிதியமைச்சர் சி.சுப்ரமணியம், சென்னை மாகாண முதல்வர் காமராஜ் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் உளுந்தூர்பேட்டை விமானப் படை தளத்துக்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் நெய்வேலி சென்று, சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களை தொடங்கி வைத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வும் அரங்கேறியது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்கு அடித்தளமாக விளங்கிய உளுந்தூர்பேட்டை விமான தளம் பயன்பாடின்றி, சுற்றுப்புற விவசாயிகளின் தானிய உலர் களமாக மாறியுள்ளது.

இந்த விமானப்படைத் தளத்தை விமானநிலையமாக மாற்றி வான்வழி போக்குவரத்தை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூடவிழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி.ரவிக்குமார், மக்களவையில் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து விமானத் துறை அதிகாரிகளும் அவ்விடத்தை வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதற்கு பின் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனிடையே இந்த பழைய விமானப்படைத் தளத்தை சீரமைத்து விமான சரக்கு முனையமாகவும், பைலட்டுகளுக்கான பயிற்சி மையமாகவும் மாற்ற வேண்டும் என உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தை ஒட்டி தான் உளுந்தூர்பேட்டை விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து பொருட்களை போக்குவரத்து நெரிசலுக்கு மிகுந்த அப்பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவேதரை வழிப் போக்குவரத்துக்கு அருகாமையில் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள உளுந்தூர்பேட்டை விமானப்படை தளத்தை விமான சரக்குமுனையமாக மாற்றி, பொருட்களை இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து எடுத்துச் சென்றால்சரக்குகளை கையாள்வது இலகுவாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும், இப்பகுதியில் பொருளாதார புழக்கமும் அதிகரிக்கும்.

இதுதவிர விமான ஓட்ட பயிற்சி அளிக்கும் பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் ஓடுதளம் இன்றி, பல்வேறு இடங்களைத் தேடிஅலைகின்றனர். எனவே விமானி பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த ஓடுதளத்தை சீரமைத்து, பயன்படுத்த அனுமதி அளிக்கும் பட்சத்தில் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE