திருப்பூர்: கரைப்புதூரில் இறைச்சி கழிவுகளுடன் குடிநீர் விநியோகம்!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாநகரை ஒட்டிய சின்னக்கரை, கரைப்புதூர், அருள்புரம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகள், தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளாகும். தொழில் நிறுவனங்களை நம்பி, ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்குழாய் நீர் மாசடைந்த நிலையில், குடிநீரும் போதிய சுகாதாரமின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கரைப்புதூர் ஊராட்சி அமராவதி நகரில் கடந்த 1-ம் தேதி குடிநீருடன் கோழி மற்றும் மீன் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக மக்கள் கூறியதாவது:

கரைப்புதூர் ஊராட்சிக்கு அத்திக்கடவு, பில்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நொச்சிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாய ஆலைகள் அதிக அளவில் இருப்பதால் ஆழ்துளை கிணற்று நீரின் தன்மை மாறிவிட்டது. பல்வேறு வண்ணங்களில் குடிநீர் வருகிறது. பொதுமக்களும் வேறு வழியின்றி அந்த நீரைப் பிடித்து பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். ஏற்கெனவே அபிராமி நகரில் சிவப்பு, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு என ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்வேறு நிறங்களில் தண்ணீர் வந்தது.

இறைச்சிக் கழிவுகளுடன்
விநியோகிக்கப்பட்ட குடிநீர்.

கிணறுகளிலும் தண்ணீரின் நிறம் மாறிவிட்டது. இந்த ஆழ்குழாய் நீரை தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடலில் அரிப்பு ஏற்படுகிறது. அதேபோல் வீட்டின் குழாய்கள் மற்றும் வாளி உள்ளிட்டவை துருப்பிடித்துவிட்டன. ஆழ்குழாய் நீர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீரும் அசுத்தமாக விநியோகம் செய்வது, மக்களின் அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் தொழிலாளர்களும், இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாயக் கழிவுநீரை முறைகேடாக சாய ஆலைகள் நிலத்துக்குள் செலுத்தி வருவதால் இந்த பகுதி முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சுமிநகர், அபிராமிநகர், கவுண்டம் பாளையம், கண்ணம்பாளையம் புதூர், பாச்சாங்காட்டுபாளையம், சின்னக்கரை, அருள்புரம் உட்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த பகுதியின் நிலைமை கட்டுக்குள் வரும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE