திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் படித்தவர்களில், 9 பேர், அதன் கிளை பயிற்சி மையமான உடுமலையில் 2 பேர் என மொத்தம் 11 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு, கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 8 ஆயிரத்து 932 காலி பணியிடங்களுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பயிற்சி மையத்தில் படித்த ஜவஹர், முகேஷ், குமரன், அகிலேஷ், அருண்குமார், விமலா, ஜான்சிராணி, முரளி பிரகாஷ், நர்மதா ஆகிய 9 பேர், கிளை மையமான உடுமலை பயிற்சி மையத்தில் படித்த சந்தோஷ்குமார், மாலதி ஆகிய 2 பேர் என மொத்தம் 11 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், வேலைவாய்ப்பு அலுவலர் ரே.சுரேஷ் உட்பட பலர் பாராட்டினர்.
இதுதொடர்பாக தேர்ச்சி பெற்றவர்கள் கூறும்போது, “எங்களில் பலருக்கு இது முதல் மற்றும் 2-ம் முயற்சிதான். தொடர்ச்சியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக்கப்பூர்வமாக கிடைக்கும் பயிற்சிதான், அரசு நடத்தும் போட்டித் தேர்வை மிக எளிமையாக எழுத வைக்கிறது.
அதேபோல், திருப்பூரில் நடத்தப்படும் மாதிரி தேர்வின் வினாத்தாள், அசல் போட்டித் தேர்வுபோல் மிகுந்த தரத்துடன் எடுக்கப்படும். இதற்காக உழைக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி. 10 மாதிரி தேர்வுகளும், 10 போட்டித் தேர்வுகள்போல்தான் இருக்கும். எங்களில் பலர் மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். பட்டம் படித்து பகுதிநேர வேலை பார்த்துவிட்டு, இங்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்றோம். இன்றைக்கு அரசு பணியில் அடியெடுத்து வைத்துள்ளோம்” என்றனர்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரே.சுரேஷ் கூறும்போது, “ஒவ்வொரு போட்டித் தேர்வும் குறிப்பிட்ட மாதங்களில்தான் அறிவிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் போட்டித் தேர்வு அறிவிப்புக்கு பின்னரே பாடங்கள் எடுக்கப்படும். ஆனால், இங்கு அறிவிப்புக்கு முன்னதாகவே, தேர்வர்களின் பாடங்களை 60 சதவீதம் முடித்துவிடுவோம்.
அறிவிப்புக்கு பின், அடுத்த 60 நாட்களில் மொத்த பாடத்தையும் முடித்துவிட்டு, திருப்புதல் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்துவோம். எனவேதான், ஒவ்வொரு போட்டித் தேர்விலும் தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறார்கள். வகுப்பறை, நூலகத்துக்கு தேவையான புத்தகங்கள், மாதிரி போட்டித் தேர்வுக்கு தேவையான அறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் செய்து தந்துள்ளார்” என்றார்.