கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் கடந்த 5 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன. 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
கோவை உள்ளிட்ட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது கோவை விமான நிலையம். சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா,சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை இங்கிருந்து வழங்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி நவம்பர் 3-ம் தேதி வரை ஐந்து நாட்களில் 300-க்கும் மேற்பட்ட தடவை புறப்பாடு, தரையிறங்குதல் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு கோவை விமான நிலையம் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக இயங்கியது. அக்டோபர் 30-ம் தேதி 30 விமானங்கள் இயக்கப்பட்டன. 8,688 பேர் பயணித்தனர். 31-ம் தேதி தீபாவளியன்று 34 விமானங்களில் 7,636 பேரும், நவம்பர் 1- ம் தேதி 30 விமானங்களில் 6,618 பேரும், 2-ம் தேதி 30 விமானங்களில் 8,164 பேரும், 3-ம் தேதி 30 விமானங்களில் 7,500-க்கும் மேற்பட்டோரும் பயணித்தனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன” என்றனர்.
கோவை விமான நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களில் விமான ஓடுபாதையில் 300-க்கும் மேற்பட்ட தடவை விமானம் தரையிறங்கும் மற்றும் புறப்பாடு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் விமான கட்டுப்பாட்டு அறை (ஏடிசி) மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஒவ்வொரு முறை விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு நிகழ்வுகளும் மிக பாதுகாப்பாக கையாளப்பட்டன. பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
» திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முடக்கம்
» தேனியில் கனமழைக்கு வயல்களில் நீர் தேங்கியதால் அறுவடை இயந்திரங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு