அவிநாசி சாலை உயர்மட்ட பாலத்தை மேலும் 5 கி.மீ. தூரம் நீட்டிக்க திட்டம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அவிநாசி சாலை உயர்மட்ட பாலத்தை நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிப்பு செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை, பெங்களூரு, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கோவை மாநகரை அடைவதற்கு அவிநாசி சாலை பிரதானமாக உள்ளது. இச்சாலையில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 2010-ம் ஆண்டு இச்சாலை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621.30 கோடி கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

17.25 மீட்டர் அகலத்தில் 4 வழிப்பாதையாக, மொத்தம் 306 தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹோப்காலேஜ் சந்திப்பு ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில், அதிகரித்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வாகனப் போக்குவரத்து போன்றவற்றை கணக்கில் கொண்டு, உயர்மட்ட பாலத்தை மேலும் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூண்கள் மீது ஓடுதள கான்கிரீட் கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சிட்ரா சந்திப்பு, ஹோப்காலேஜ் சந்திப்பு, நவஇந்தியா சந்திப்பு, அண்ணாசிலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்கி சில மீட்டர் தொலைவில் மீண்டும் மேம்பாலத்தில் ஏறிச்செல்லும் வகையில் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமானப் பணி, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக தோராயமாக ரூ.800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் ஏறு, இறங்குதளம் அமைகிறது. இதுதொடர்பாக ஆய்வுகள் முடிந்து, அரசு அனுமதிக்கு பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE