ஈரோடு: பண்ணாரி - திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பண்ணாரி - திம்பம் - ஆசனூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில், 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்தது.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு: இந்நிலையில், புலிகள் காப்பக வனவிலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, இரவு நேர வாகனப்போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதன்படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் 12 சக்கர லாரிகளுக்கும் இந்த சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அவசர தேவைகளுக்காக இரவு நேரத்திலும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அனுமதிச்சீட்டு (பாஸ்) வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், திம்பம் சாலையில் செல்லும் வாகனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் நீதிமன்றம் வரையறுத்து தெரிவித்திருந்தது.
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்: கடந்த 2022-ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக கனரக வாகனங்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், திம்பம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு கூட உரிய நேரத்தில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
விதிகளை மீறி அனுமதிக்கப்படும் கனரக வாகனங்கள் பழுதடைவதும், விபத்துக்குள்ளாவதும் அதிகரித்துள்ளதால், புலிகள் காப்பக வனப்பகுதியில் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள், மணிக்கணக்கில் அச்சத்துடன் சாலையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து தாளவாடி சுற்றுவட்டார கிராம மக்கள் கூறியதாவது: திம்பம் சாலையில் பயணிக்கும் வாகனங்களை தணிக்கை செய்ய பண்ணாரியில் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வனத்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. மறுபுறம் காரப்பள்ளம் சோதனைச்சாவடியிலும் இந்த வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களைக் கண்காணிக்க வேண்டிய இந்த சோதனைசாவடிகள் பெயரளவுக்கு செயல்படுகின்றன. வாகன ஓட்டிகள், குறிப்பாக, விதிகளை மீறி கனரக வாகனங்களை அனுமதிப்பதால், மலைக் கிராம மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருத்தப்படாத கேமராக்கள்: நீதிமன்ற உத்தரவுப்படி திம்பம் மலைச்சாலையில் 20 கி.மீ. வேகத்திலும், அதன் பின் ஆசனூர் வரை 30 கி.மீ. வேகத்திலும் வாகனங்கள் பயணிக்க வேண்டும். இதனை கண்காணிக்க கேமரா மற்றும் வேகம் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைக்கு வராததால் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதுடன், வனவிலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி, தாளவாடி சுற்றுவட்டார மக்கள் இரவு நேரத்தில் அவசிய தேவைகளுக்கு பயணிக்க பாஸ் வழங்கப்படவில்லை. இதற்கென விண்ணப்பித்த பலருக்கும் பதில் கூட வரவில்லை. கொண்டைஊசி வளைவுகளில் விபத்துகளைத் தடுக்க வைக்கப்பட்டு இருந்த குவியாடிகள் சேதமடைந்துள்ளன. அதேபோல், பிளிங்கர் எனப்படும் எச்சரிக்கை விளக்குகளும் இயங்குவதில்லை. இவற்றை சரி செய்தால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிக எடை வாகனங்கள்: திம்பம் சாலையில் 16.2 டன் எடை வரை ஏற்றிய வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை.
தமிழகம் - கர்நாடகா இடையே சிமென்ட், கரும்பு, கல், சாக்குப்பை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அதிக எடையில், கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு திம்பம் சாலையில் பயணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவற்றை எடை போட அமைக்கப்பட்டுள்ள எடை மையங்கள் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனை மாற்றி, சோதனைச்சாவடியில் அனைத்து கனரக வாகனங்களையும் எடைபோட்டு, அதிக எடை இருந்தால் உடனே திருப்பி அனுப்ப வேண்டும். இதனை முழுமையாக கண்காணிக்கும் வகையில் கேமரா பொருத்தி டிஜிட்டல் மயமாக்கினால் தான் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
திம்பம் சாலையில் வாகனங்களைக் கண்காணித்து முறைப்படுத்த மூன்று துறைகளின் சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், போதுமான பணியாளர்கள் இல்லாததால், கண்காணிப்பை முழுவீச்சில் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பணிக்கென மூன்று துறைகளும், ஷிப்ட் முறையில், தனியாக பணியாளர்களை நியமித்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும் நிலை உள்ளது.
அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து வனத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பண்ணாரி - திம்பம் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிக எடை ஏற்றிய வாகனங்கள், ஆசனூர் மற்றும் பண்ணாரியில் எடை பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதல் எடையுடன் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் தோறும் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களின் உயர அளவும் கணக்கிடப்படுகிறது.
இரவு நேரங்களில் உள்ளூரைச் சேர்ந்த வாகனங்கள் மட்டும் அவசர தேவைகளுக்காக அனுமதிக்கப்படுகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சோதனைச்சாவடி பகுதியிலேயே எடை மேடை அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும், இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.