மாற்று சுற்றுச்சாலை திட்டம்: மதுரை விமான நிலையத்துக்கான பயண தூரம் 5 கி.மீ. அதிகரிக்க வாய்ப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ரன்வே விரிவாக்க பணிக்காக மாற்று சுற்றுச் சாலை திட்டம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், மதுரை விமான நிலையத்துக்கு பயணம் செய்ய வேண்டிய தூரம் 5 கி.மீ. வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை விமான நிலையம் 1957-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு மட்டுமின்றி சிங்கப்பூர், துபாய், கொழும்புவுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும், தற்போது வரை சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்படவில்லை. இங்கிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 2 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்கின்றனர்.

வெளிநாட்டு விமானங்கள் போதிய அளவு இயக்கப்படாததால் தென் மாவட்ட மக்கள் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான முதற்கட்ட முயற்சியாக அக். 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியுள்ளது.

அடுத்தகட்டமாக 7,500 அடி நீளமுள்ள ரன்வேயை பெரிய விமானங்கள் வந்து செல்லக்கூடிய வகையில் 12,500 அடி நீளமாக மாற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி களுக்கான அறிவிப்பாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டது.

மதுரை விமான நிலைய ரன்வேயில் தரை யிறங்கும் விமானம்.

ரன்வே விரிவாக்கம் தொடர்பான ஆலோ சனை நடந்தபோது முதலில் ‘அண்டர் பாஸ்’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி விமான நிலையம் அருகே செல்லும் சுற்றுச்சாலை சுரங்கப்பாதையாக செல்லும் வகையிலும், அதன் மீது ரன்வே விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப் பட்டது.

இதற்கு ரூ.600 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டதாகவும், புதிதாக மாற்று சுற்றுச்சாலை அமைத்தால் இதைவிட குறைந்த தொகைதான் செலவாகும் என்பதால் இத்திட்டத்தை கைவிட்டுவிட்டதாகக் கூறப் படுகிறது.

‘அன்டர் பாஸ்’ திட்டம் கைவிடப்பட்டு தற்போதுள்ள சுற்றுச்சாலை துண்டிக்கப்படு வதால் கப்பலூர், திருமங்கலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அதிக தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்படும் என தொழில் துறையினர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி யுள்ளனர்.

என்.ஜெகதீசன்

இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் கூறியதாவது: திருச்சி விமான நிலையத்தின் ரன்வேயை நீட்டிப்பு செய்வதற்கு, புதுக்கோட்டை சாலையில் வாகனங்கள் சுரங்கப் பாதையில் செல்லும் (அண்டர் பாஸ்) திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் சண்டிகர் விமான நிலையத்தில் ரன்வே அண்டர் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை யிலும் இதே திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது. ஆனால், மதுரை சுற்றுச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. இந்த சாலையை அவர்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்காததால் மதுரை விமான நிலையத்தில் மட்டும் மாற்று சுற்றுப் பாதையை அமைக்கவும், தற்போதுள்ள ரன்வேயை அப்படியே நீட்டிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த அடிப் படையில் ரன்வேயை விரிவாக்கம் செய்து மாற்று சுற்றுச் சாலை அமைத்தால் அருப்புக்கோட்டை ரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ரோட்டில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வரக்கூடியவர்கள், தற்போது உள்ள பயண தூரத்தைவிட 5 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படும்.

சுற்றுச்சாலையை பயன்படுத்தி மதுரைக்கு வருவோரும், மதுரையிலிருந்து திருமங்கலம் மார்க்கமாக செல்வோரும் 5 கி.மீ.க்கும் அதிகம் சுற்ற வேண்டியிருக்கும். எனவே, இந்த திட்டம் எந்த அளவுக்கு சரியாக வரும் என்பது தெரியவில்லை, எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE