விண்வெளித் துறையின் நட்சத்திரம் | அப்துல் கலாம் பிறந்தநாள் ஸ்பெஷல்!

By KU BUREAU

அணு விஞ்ஞானியான அப்துல் கலாம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விஞ்ஞானியாகவும் அறிவியல் துறை நிர்வாகியாகவும் பணியாற்றினார். இந்திய விண்வெளித் துறைக்கு கலாம் ஆற்றிய பங்கு அளப்பரியது.

உள்நாட்டு விண்வெளித் திட்டங்களிலும் ராணுவ ஏவுகணை மேம்பாட்டிலும் முனைப்புடன் ஈடுபட்டார். எரிபொருள் உதவியோடு ஏவப்பட்டு, விண்வெளியில் வட்டப் பாதையை அடைந்தபிறகு எரிபொருள் துணையின்றிச் செயல்படும் ஏவுகணையை வடிவமைத்ததாலும் ஏவுகணை தாங்கி விண்கலத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதாலும் ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ எனப் போற்றப்பட்டார்.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தொழில்நுட்பத்திலும் கலாம் சிறந்து விளங்கினார். SLV – III, PSLV ராக்கெட்டுகளை மேம்படுத்தியதில் கலாம் முக்கியப் பங்காற்றினார். இந்திய அணு சக்தித் துறை யோடு இணைந்து 1998இல் நிகழ்த்தப்பட்ட பொக்ரான் - 2 சோதனையில் துறைரீதியாகவும் தொழில்நுட்பரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முக்கியப் பங்காற்றினார் கலாம். இந்தச் சோதனையின் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தனது அணு ஆயுத வலிமையை நிரூபித்தது.

பிரதமர் அலுவலகத் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயலாளராகவும் கலாம் பணியாற்றினார். தொழில்நுட்பத் தகவல் கணிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆணையத்தின் (TIFAC) தலைவ ராகப் பணியாற்றினார். இவர் உருவாக்கிய ‘டெக்னாலஜி விஷன் 2020’ கோப்புகள், இந்தியாவை வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலுக்குத் தரம் உயர்த்துவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தன.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக 2002இல் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அந்தப் பதவியை வகித்த முதல் அறிவியல் விஞ்ஞானி என்கிற பெருமையை கலாம் பெற்றார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பாக 48 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அப்துல் கலாமைக் கௌரவிக்கும் விதமாக ஒடிசா மாநிலக் கடற்கரையில் அமைந்துள்ள ‘வீலர்’ தீவின் பெயர் 2015 செப்டம்பரில் ‘அப்துல் கலாம் தீவு’ என மாற்றப்பட்டது. இந்தியாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளம் இந்தத் தீவில் அமைந்துள்ளது. - ப்ரதிமா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE