ஆதர்ச நாயகர் கலாம்! - அப்துல் கலாம் பிறந்தநாள் ஸ்பெஷல்

By KU BUREAU

ஏவுகணைத் துறையின் நாயகர், விஞ்ஞானி, அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல உயரிய பதவிகளை வகித்திருக்கிறார் அப்துல் கலாம். எனினும் மாணவச் சமூகத்தினர் மனதில் கலாம் பெற்றிருந்த இடம் அவரைக் காலத்திற்கும் கொண்டாட்டத்திற்குரிய நாயகராக மாற்றியது.

இந்தியத் தலைவர்களில் யாரும் கொண்டிராத தனித் தன்மை கலாமிடம் இருந்தது. எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் மாணவர் களிடமும் இளைஞர்களிடமும் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள்தான் என்பதை அவர் உறுதியாக நம்பி னார். இந்தியாவின் வல்லரசு கனவு இளைஞர்கள் மூலமாகவே கை கூடும் எனத் தொடர்ந்து கூறிவந்தார்.

பல துறைகளில் சாதித்து, பலரின் ஆதர்ச நாயகரான கலாமின் இயல்பான பேச்சு மாணவரிடத்தில் அவரை நெருக்கமாகக் கொண்டு சென்றது. கலாம் ஒரு நிகழ்வில் பேசுகிறார் என்றால் அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடிவிடுவார்கள். மாணவர்களிடம் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை உடைத்து, அவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வந்துவிடுவதில் கலாம் வல்லவர். தான் நிகழ்த்திய ஒவ்வோர் உரையாடலையும் மாணவர்களுக்குரிய உந்துசத்தி யாக மாற்றிய தலைவர் அவர்.

கனவு காணுங்கள்: “மாணவர்களே கனவு காணுங் கள். கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு. நம்பிக்கை நிறைந்த மனிதர் யார் முன்பும் எப்போதும் மண்டியிடுவதில்லை” என்கிற கலாமின் பொன்மொழிகள் மாணவர்களிடத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்கிற கலாமின் வார்த்தைகள் திறமையிருந்தும் துவண்டிருந்த மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றின.

உலக மாணவர் நாள்: குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் ஓய்வை விரும்பாத கலாம், இந்தியா முழுவதும் இருந்த கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். தனது இறுதிக் காலம்வரை மாணவர்களின் உற்ற தோழனாக இருந்து அவர்களை வழிநடத்திய கலாமின் பிறந்தநாளை ‘உலக மாணவர் நாளா’கக் கொண்டாடுவது மிகவும் பொருத்த மானது. - மாயா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE