நெய்வேலியில் முக்கிய நேரங்களில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் சேவையை குறைத்து, தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக போக்குவரத்துக் கழகம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து மொத்தம் 36 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 2 குளிர்சாதனப் பேருந்துகளும், 12 நகர்ப்புற சேவை பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.எஞ்சிய பேருந்துகள் தொலைதூர மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
இதில் மகளிருக்கான கட்டணமில்லா நகர்ப்புற பேருந்துகள் சேவையில் குறைபாடு இருப்பதாகவும், ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் காலை 8 முதல் 10 மணி வரையில், மாலையில் 3.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் மகளிருக்கான கட்டணமில்லா நகர்ப்புற பேருந்துகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பயணிகள் தரப்பில் கூறுகையில், “பீக் ஹவர்ஸில் தனியார் பேருந்துகள், தொலைதூர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அரசு அறிவித்த சலுகைப் பயணத்தை போக்குவரத்துக் கழக நிர்வாகம் முடக்கி வைப்பதேன்? நெய்வேலி பணிமனையில் இருந்து இயக்கப்படும் இரு குளிர்சாதனப் பேருந்துகளில் பெயரளவுக்கே குளிர்சாதன வசதி உள்ளது.
» கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது - தயாரானது விரிவான திட்ட அறிக்கை!
» கடலூரில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இன்று உடற் தேர்வு நடைபெறுகிறது
குளிர்சாதனம் பழுதான நிலையில், பேருந்தின் பக்கவாட்டு ஜன்னல்களை திறக்கும் வசதியாவது செய்து கொடுக்கலாமே!” என்று தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக்கழக நெய்வேலி பணிமனை மேலாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, “மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதில் குறைப்பு ஏதுமில்லை. கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குளிர்சாதனப் பேருந்தில் பிரச்சினை உள்ளது.
நெய்வேலி முதல் விக்கிரவாண்டி இடையேயான மோசமான சாலையில் பேருந்து இயக்கும்போது குளிர்சாதனப் பேருந்தின் சென்சார்கள் இயங்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. குளிர்சாதனப் பேருந்தை பராமரிக்க ஏசி மெக்கானிக்குகள் இல்லை. தற்போது ஓட்டுநர் ஒருவரே ஏசி மெக்கானிக்காகவும் இருந்து வருகிறார் என்பதை அறிந்து, அவரை ஓட்டுநர் பணியில் இருந்து விடுவித்து ஏசி பராமரிப்பு பணிக்கு அமர்த்தியுள்ளோம்” என்றார்.