ஆரோவில் மாத்ரி மந்திர் ஏரியை சுற்றிப் பார்த்த 20 நாடுகளின் அதிகாரிகள்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஸ்ரீ அன்னையின் கனவுத் திட்டமான ஆரோவில் மாத்ரி மந்திர் ஏரியை 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள் மற்றும் முதன்மை அதிகாரிகள் இன்று சுற்றி பார்த்தனர். இந்த ஏரியால் ஆரோவில் சுற்றியுள்ள கிராமங்களின் நீர்மட்டம் உயரும் என்பதை அறிந்து அதன் விவரங்களை அவர்கள் கேட்டறிந்தனர்.

ஆரோவில் சர்வதேச நகரம், மாத்ரி மந்திர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து வந்த குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டனர். இக்குழுவில் உலக வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிறுவனத் தலைவர் ராஜீவ் குப்தா, ரிலிகேர் செயல் தலைவர் ரஷ்மி சாலியா, மொரிசியஸ் குடியரசின் உயர்மட்ட ஆணையர் ஹைமன்டாயல் டில்லம், பெலாரஸ் தூதரகம் அலெக்சாண்டர் மோஷ்சோவிடிஸ்,

மங்கோலியா உயர் மட்ட ஆணையர் கன்போல்டு டாம்பாஜாவ், நமீபியா உயர்மட்ட ஆணையர் காப்ரியேல் சினிம்போ, வட மாசி டோனியா உயர் மட்ட ஆணையர் மக்மூத் அப்துல்லா அல்கானி, லெசோதோ உயர்மட்ட ஆணையர் மரோசா பெடெலோ மாகோ பனே, கமரோஸ் தூதரகம் அசின் மசா மசூத், பிஜி உயர்மட்ட ஆணையம் சீமா பால்டர் சிங் உட்பட 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். மாத்ரி மந்திரில் அவர்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஸ்ரீ அன்னையின் கனவு திட்டமான மாத்ரி மந்திர் ஏரியை சுற்றி பார்த்தனர். சுமார் 30 அடி ஆழம், 100 அடி நீளத்தில் இந்த ஏரி அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஏரி சுற்றியுள்ள கிராமங்களில் நீர் மட்டத்தை மேம்படுத்துகிறது என்று ஆரோவில் தரப்பில் விளக்கினர்.

ஏரியை பற்றி விளக்கமாக வெளிநாட்டவர்கள் கேட்டறிந்தனர். இந்த ஏரியால் நீர்மட்டம் உயர்வதுடன் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதை அறிந்து விவரங்களை முழுவதையும் அவர்கள் கேட்டறிந்தனர். ஆரோவில் அறக்கட்டளை துணை செயலர் சுவர்ணம்பிகா இந்த ஏரியின் பயன்பாட்டை முழுமையாக விளக்கினர்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், "ஆரோவில் அறக்கட்டளை, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல் படுகிறது. ஆரோவில் என்பது சர்வதேச நகரமாகும், இங்கு மனித ஒற்றுமை ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருப்பொருளில் சோதிக்கப்படுகிறது. இங்கு உலகின் 60 நாடுகளைச் சேர்ந்த 3,000 மக்கள் வாழ்கின்றனர்.

இங்கு அனைத்து மதங்கள், ஜாதிகள் மற்றும் நாடுகளின் எல்லைகளை மீறி மனித ஒற்றுமை விரிவுப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை மனித ஒற்றுமையில் மட்டுமில்லாமல், மாசுபாடு குறைப்பு, கழிவு மேலாண்மை, மற்றும் உணவு நிலைத் தன்மை போன்றவற்றிலும் எங்கள் முயற்சிகள் தொடர்கின்றன" என்று வெளிநாட்டவருக்கு விளக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE