உதகையில் வானில் ஒளிர்ந்த 80,000 ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் தென்பட்டதாக நாசா ஆராய்ச்சியாளரான நஞ்சுண்டன் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

சூரியனை நீள்வட்ட பாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதை தான் வால் நட்சத்திரம் என்கிறோம். இந்நிலையில் கடந்த 1ம் தேதி மாலை 6 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய உதகையில் மேற்கு வானப் பகுதியில் அரிய வால் நட்சத்திரம் ஒன்று தென்பட்டுள்ளது.

10 நிமிடங்கள் வானில் தென்பட்ட இந்த வால் நட்சத்திரத்தை கண்ணால் நேரடியாக காண முடிந்துள்ளது. ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு இயற்கை நிகழ்வு அல்லது வானவில் என்று நினைத்தனர். நாசா ஆராய்ச்சியாளரான ஜனார்த்தன் நஞ்சுண்டன், இது இயற்கை நிகழ்வு அல்ல. வானில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வால் நட்சத்திரம் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது,"உதகையில் உள்ள மேற்கு வானத்தில் கடந்த 1ம் தேதி மாலை நேரத்தில் ஒரு அரிய நிகழ்வு காணப்பட்டது. இது வழக்கமான இயற்கை நிகழ்வாக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் அது வானவில் நிறங்களை போன்று பல வண்ணங்களில் இருந்ததால் அது வானவில்லாக இருக்கும் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னர் தான் உதகையில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வால் நட்சத்திரம் என்பது தெரியவந்தது.

இந்த வால் நட்சத்திரமானது பூமியில் இருந்து 129.6 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்தது. மாலை 6 மணியளவில் வானில் தெரிந்த வால் நட்சத்திரமானது 10 நிமிடங்கள் வானவில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி சீனாவில் இந்த அரிய வால் நட்சத்திரம் தெரிந்ததை சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டன் அப்சர்வேட்டரி கண்டுபிடித்தது. மேலும் சீனாவை சேர்ந்த வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி என்பவர் இதை புகைப்படம் எடுத்து உறுதி செய்துள்ளார்.

ஒரு மாதத்துக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் தெரிந்தது. தற்போது இது மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரியில் தெரிந்தது. இந்த வால் நட்சத்திரமானது சூரியன் வருவதற்கு முந்தைய நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தெரியும். இந்த வால் நட்சத்திரமானது மீண்டும் வருகிற 12ம் தேதி வானில் தென்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE