கோடை மழை காரணமாக பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி @ சேலம்

By த.சக்திவேல்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. சேலம் வனக்கோட்டத்தில் மேட்டூர், டேனிஷ்பேட்டை, ஏற்காடு, சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இதில் மேட்டூர் வனச்சரகத்தை ஒட்டி ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகம் மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியும் உள்ளது.

இங்கு யானை, காட்டெருமை, குரங்கு, மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. கோடைகாலங்களில், உணவு மற்றும் தண்ணீர் தேடி, தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு மற்றும் காவிரி ஆறு பகுதிகளுக்கும், எல்லையோர கிராமங்களுக்கும் அவை இடம் பெயர்வது வழக்கம்.

கோடைகாலத்துக்கு முன்பே வெயில் தாக்கம் காரணமாக, வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்தும், நீர்நிலைகள் வறண்டும் காணப்பட்டன. இதனால் யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி பாலாறு பகுதிக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் நுழைந்தன.

கிராமத்துக்குள் நுழைந்த வனவிலங்குகள் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தின. அவற்றை தடுக்க வனச்சரக ஊழியர்கள் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, வன விலங்குகளின் தாகத்தைத் தணிக்க, வனப்பகுதியில் அமைந்துள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியும் நடந்தது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக, மேட்டூர், எடப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளது.

மேட்டூர், ஏற்காடு பகுதியில் வறட்சியின் பிடியில் இருந்த வனப்பகுதி, பசுமைக்கு திரும்பியுள்ளது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் வனவிலங்குகளின் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது, என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் காட்டுத் தீ பரவுவது வழக்கம். நடப்பாண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகரித்திருந்தது. ஆங்காங்கே வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீ ஊழியர்களை கொண்டு அணைக்கப்பட்டது.

கோடை மாதத்தில், காட்டுத் தீ பாதிப்பு ஏற்படும் அச்சம் இருந்தது. ஆனால், தொடர் மழை பெய்துள்ளதால் காட்டுத் தீ அபாயம் இல்லை. மேலும், வனவிலங்குகளுக்கு பசுந்தீவனமும், தண்ணீரும் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இதனால் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவது குறையும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE