மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்... அதிக கூட்டங்களில் கலந்து கொண்டது மோடியா, ராகுலா?

By ஆர். ஷபிமுன்னா

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், பாஜக தலைமையிலான கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திரமோடி 103 கூட்டங்களிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி 40 கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி

இந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) சார்பில் பிரதமர் மோடியும், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் கூட்டணிகளின் முகமாக இடம் பெற்றுள்ளனர். தேர்தலின் துவக்கம் முதல் பிரதமராக மோடி, மூன்றாவது முறை தொடர்வாரா? அல்லது அதிசயிக்கும் வகையில் ராகுல் பிரதமராவாரா? என்ற கேள்வி நிலவி வருகிறது.

இந்நிலையில், மார்ச் 5 ல் மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், இருவரும் நாடு முழுவதிலும் பயணித்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பிரதமர் மோடியே மிக அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

மே 9 வரை அவர் 103 கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மார்ச்சில் 9, ஏப்ரலில் 68 மற்றும் மே மாதம் 26 கூட்டங்கள் நடந்துள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு பிரதமர் மூன்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இத்துடன் அவர் தொலைக்காட்சி ஊடகங்கள், நாளேடுகள் மற்றும் இதர பத்திரிகைகளுக்கு மொத்தம் 24 பேட்டிகள் அளித்துள்ளார்.

மேலும் அவர் 21 ரோடு ஷோக்கள் நடத்தியுள்ளார். நூற்றுக்கணக்கானக் கோயில்களிலும் தரிசனம் செய்துள்ளார். டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான பிரபலங்களை சந்தித்தும் பேசியுள்ளார்.

காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவரான ராகுல் காந்தி இதுவரை 40 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்படும் வரை நியாய யாத்திரையில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்துள்ளார். நாடு முழுவதிலும் பயணித்த ராகுலின் யாத்திரை, மார்ச் 17 ல் முடிவுற்றது.

பிரதமர் மோடி

மார்ச் 18 முதல் மே 10 வரை ராகுல் தேர்தலுக்காக 40 கூட்டங்கள் நடத்தி உள்ளார். இத்துடன் தனது கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பத்திரிகையாளர்கள் கூட்டங்களிலும் ராகுல் கலந்துகொண்டு பேசினார். ஆனால், இதுவரையும் அவர் பிரதானமான எந்த ஊடகங்கள், நாளேடுகளுக்கு பேட்டி அளித்ததாகத் தெரியவில்லை.

எனினும், ராகுலின் பல்வேறு காட்சிப் பதிவுகள் அவ்வப்போது வெளியாகி பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. அதேசமயம், நாட்டின் இதயமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் மூன்றுகட்ட தேர்தல் முடியும் வரை ராகுல் எந்த பொதுக்கூட்டமும் நடத்தவில்லை.

மே 10ம் தேதியன்று முதல்முறையாக ராகுல் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தி உள்ளார். கூட்டணி சகாவான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிற்காக அவர் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE