கோவை: ‘செல்ஃபி’, ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிரபலமாவதற்காக மருதமலை அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மலை மீது ஆபத்தான முறையில் ஏறி உயிரை பணயம் வைக்கும் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மொபைல்போன்களில் ‘செல்ஃபி’ எடுத்தல், ‘யூ டியூப்’,‘இன்ஸ்டாகிராம்-ரீல்ஸ்’ உள்ளிட்டசமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகவும், வருமானம் ஈட்டவும் பலவிதங்களில் வீடியோக்களை எடுத்து சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது அதிகாரிகள் கவனத்துக்கு சென்று அதற்கேற்ப அபராதம் விதித்தல், மன்னிப்பு கடிதங்களை எழுதி வாங்குதல், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிடவைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் இளம்பெண்கள் இருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின் இளம்பெண்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
» திருவீதிபள்ளத்தில் காவல் நிலையம் அருகே திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சமுதாய கழிப்பறை
» இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் 4 பேர் கைது
கோவை மாவட்டத்திலும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்திலும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் ரீல்ஸ், செல்ஃபி, யூடியூப் வீடியோக்கள் எடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலை அருகே வனப்பகுதிக்குள் உள்ள மலை மீது ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து செல்ஃபி, ரீல்ஸ் வீடியோக்களை இளைஞர்கள் எடுத்துவரும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு அவ்வழியே பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் சிலர்எச்சரிக்கை விடுத்தாலும் இளைஞர்கள் கண்டுகொள்வதில்லை.
மருதமலை அடிவாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மருதமலை படிக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால் பக்தர்கள் செல்ல சில நாட்கள் தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழக காவலாளி சமீபத்தில் யானை துரத்தியபோது கீழேவிழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், வனப்பகுதிக்குள் அத்துமீறும் இளைஞர்களின் நடவடிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், தடை செய்யப்பட்ட குகை பகுதிக்குசெல்வதால் ஏற்படும் ஆபத்தை உணர வைத்தது. தற்போது கோவையில் அதேபோன்ற சம்பவம் மருதமலை வனப் பகுதியில் அத்துமீறும் இளைஞர்களால் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உரிய நடவடிக்கை: இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, “மருதமலை வனப்பகுதியில் இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் அப்பகுதிக்கு செல்ல முடியாதபடி தடுப்பு அமைக்கப்படும். செல்ஃபி, ரீல்ஸ், யூ டியூப் வீடியோக்கள் எடுப்பதற்காக பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி செல்வது, வீடியோக்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.