முதுமை எனும் பூங்காற்று 18: தலைமுறை இடைவெளியைத் தகர்ப்போம்

By விவேக பாரதி

மூத்த தலைமுறையினரிடம் இளைய தலைமுறையினர் கேட்க விரும்பாத வாசகங்களில் மிக முக்கியமானது, ‘அந்தக் காலத்துல நாங்க எல்லாம்…’ என்பதுதான். மூத்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார்களோ அதே பார்வையுடன் இளம் தலைமுறையினரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இது உலகின் எல்லா இனக் குழுக்கள் மத்தியிலும் இயல்பான விஷயம்தான். முற்றிலும் புதிய பார்வையுடன் உலகை அணுகும் இளையவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்வதில் அதிருப்தி இருப்பதும் இயல்பானதுதான். அத்துடன், மூத்தவர்களுக்குப் புதிய விஷயங்கள் எதுவுமே தெரியாது எனும் எண்ணமும் இளையவர்களிடம் உண்டு. ‘தலைமுறை இடைவெளி’ எனும் பதத்தின் உண்மையான அர்த்தம் இதுதான்!

அக்கறையும் அதிகாரமும்

“பெரியவங்க எப்போதும் உங்க நல்லதுக்குத்தான் சொல்வோம்”, “இந்தக் காலத்துப் பிள்ளைங்க எங்கே நம்ம பேச்சைக் கேட்குது?” என்பன போன்ற வாசகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் அங்கலாய்ப்புடன் முன்வைக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் இளம் தலைமுறையினர் மீதான அக்கறைதான் பிரதானமாக இருக்கும் என்றாலும், அதை அதிகாரத்தின் ஒரு கூறாகவே இளையவர்கள் பார்க்கிறார்கள். மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளுக்குத் தங்கள் அளவில் தர்க்கபூர்வமான எதிர் கேள்விகளையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அதைக் கடுமையாக முன்வைப்பதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.

‘இன்றைய பிள்ளைகளுக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுகிறது. எனவே, அவற்றை வாங்குவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை’ என்பதுதான் பெற்றோர் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. “உனக்குத் தெரியுமா? நான் அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். ஆறாம் கிளாஸ் படிக்கும்போதுதான் உன் தாத்தா எனக்கு மை பேனா வாங்கித் தந்தார். வருஷத்துக்கு ரெண்டு யூனிஃபார்ம்தான், ஒரு ஜோடி ரப்பர் செருப்புதான். ஆனா உனக்குப் பாரு… ரெண்டு ரெகுலர் யூனிஃபார்ம், ஒரு ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்ம், ரெண்டுக்கும் தனித்தனி ஷு…” எனச் சொல்லும் அப்பாவிடம், “அப்ப அதே ஸ்கூல்ல என்னைச் சேர்த்துவிட்டிருக்க வேண்டியதுதானே... எதுக்கு இந்த ஸ்கூல்ல சேர்த்தீங்க?” என்று பிள்ளைகள் பளீரெனக் கேட்டுவிடுகிறார்கள்.

தலைமுறை இடைவெளிகளில் இன்னொரு சிக்கலும் உண்டு. பல வீடுகளில் தாத்தா - பாட்டியுடன் இருக்கும் பிள்ளைகள், அப்பாவோ அம்மாவோ ஏதாவது சொல்லித் திட்டினால், உடனே தாத்தா - பாட்டியிடம் போய்ப் புகார் சொல்வார்கள். தாத்தா -பாட்டியும் ஏதோ பேரக் குழந்தைகளைச் சமாதானம் செய்வதாக நினைத்து, “உங்கப்பா ஸ்கூல்ல படிக்கும்போது என்ன பண்ணுவான் தெரியுமா?” எனப் பழைய நாட்களை நினைவுகூருவார்கள். அதை வைத்துக்கொண்டு, “எங்களைக் குறை சொல்றீங்களே… சின்ன வயசுல நீங்களும் அப்படித்தானே இருந்துருக்கீங்க…?” என்று கேட்டுப் பிள்ளைகள் பெற்றோரைத் தர்மசங்கடப் படுத்திவிடுவார்கள்.

அந்தக் கால சூழ்நிலை வேறு. இன்றைக்கு இருக்கும் உலகம் வேறு. பேரப் பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறோம் என நினைத்து தாத்தா – பாட்டி சொல்லும் ‘பழைய சம்பவங்கள்’, பெற்றவர்களைப் பிள்ளைகள் மதிக்காமல் செயல்படும் நிலையை உருவாக்கி விடுகிறது . இதனாலேயே பல வீடுகளில் மாமியார் – மருமகள், அப்பா - பிள்ளை பிரச்சினைகள் வருகின்றன.

இன்று பல பெரியவர்கள் எளிதாகச் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். செல்போன், லேப்டாப், நவீன வாஷிங் மெஷின் என்று எல்லாவற்றையும் இயல்பாகப் பயன்படுத்தத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனது தோழியின் மாமியார், தனது பேரனுக்கு இணையாக பப்ஜியும் எக்ஸ் பாக்ஸும் விளையாடுவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். இதற்குத் தேவை சிறிது முயற்சியும், கொஞ்சம் பயிற்சியும்தான்.

நவீன சாதனங்கள்

இந்தக் காலத்துப் பிள்ளைகள் சிறு வயதிலேயே செல்போன், லேப்டாப் என அனைத்தையும் உபயோகிக்கக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். மூத்தவர்களுக்கு அவை குறித்துத் தெரியவில்லை என்றால், உடனே அவர்களுக்கு வேறு எந்த விஷயமுமே தெரியாது என நினைத்துக் கொள்கிறார்கள். இன்று டிவியை எடுத்துக் கொண்டாலே இரண்டு ரிமோட் சாதனங்கள் உள்ளன. ஒன்று டிவிக்கு, மற்றொன்று டிஷ் ஆன்டெனாவுக்கு. ஆனால், படித்தவர்களுக்கே தங்கள் வீட்டு எலக்ட்ரானிக் சாதனங்களை உபயோகிப்பதுபோல் அடுத்த வீட்டு சாதனங்களை உபயோகிக்க முடியாது.

சமையலறையில் மின்சாரத்தில் இயங்கும் அடுப்பு, மைக்ரோவேவ் உள்ளிட்ட நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பல பெரியவர்களுக்குத் தெரியாது. நவீன சாதனங்களின் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதில் இருக்கும் இடைவெளியைப் பெரிதாகப் பேசி பெரியவர்களை அவமதிப்பது இன்றைக்கு வாடிக்கையாகப் பல வீடுகளில் நடக்கிறது. “இதுகூட தெரியாம எப்படி நீங்க வேலை பார்க்கிறீங்க?”, “நீங்க சரியான பட்டிக்காடு… உங்களுக்கு எதுவுமே தெரியலை” என சிறியவர்கள் சொல்லும்போது மூத்த தலைமுறையினரின் மனது காயப்பட்டுவிடுகிறது. இதனால், அவர்கள் சில சமயம் பலர் முன்னிலையில் கூனிக்குறுகிப் போய்விடுகிறார்கள்.

இளையோரின் கடமைகள்

அஞ்சல் துறையில் பணிசெய்து ஓய்வுபெற்ற ஒருவரின் அனுபவம் இது.

மும்பையில் வசிக்கும் தன் மகனைப் பார்க்க முதன்முறையாக விமானம் ஏறியிருக்கிறார் அந்தப் பெரியவர். ஆன்லைனில் டிக்கெட்டை எடுத்துத்தந்தைக்குப் பொறுப்பாக அனுப்பிவிட்டார் அவரது மகன். என்னதான் படித்து, அரசுப் பணியில் இருந்தவர் என்றாலும் பெரியவருக்கு அது புதிய அனுபவமல்லவா? பயத்தோடுதான் விமானம் ஏறியிருக்கிறார்.

விமானப் பயணத்தின்போது கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார். ‘ஃப்ளஷ்’ பட்டனைப் பயன்படுத்தியபோது எழுந்த சத்தத்தில் அவர் பயந்துவிட்டார். வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்துவிட்டார். பயத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. நிலைமையை ஒருவாறு சமாளித்து மகனின் வீட்டுக்குப் போய் சேர்ந்தார். தான் எதிர்கொண்ட அந்தச் சங்கடமான அனுபவத்தைச் சொன்னதும் வீட்டில் உள்ள அனைவரும் சிரித்து மிக எளிதாக எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால், அச்சப்பட்ட அந்தத் தருணத்தை அவரால் மறக்கவே முடியாது. இது சின்ன விஷயம்தான். இது போல் பிள்ளைகளை, பேரக் குழந்தைகளைப் பார்க்க வெளிநாட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு தாத்தா பாட்டிக்கும் இப்படியான பல கதைகள் உண்டு.

இதில் யார் மேல் தவறு... இதுபோன்ற தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும்? புதிய சூழல் எப்படி இருக்கும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் விளக்கி பெற்றோர்களுக்குப் புரியவைக்க வேண்டியது பிள்ளைகளாகிய நம் கடமையும் பொறுப்பும் அல்லவா? அதைச் செய்யாமல் அவர்களைப் பரிகசிப்பது நியாயமா?

எது தேவை?

தலைமுறை இடைவெளி என்பது நாமே உருவாக்கிக் கொள்வதுதான். இன்று பல பெரியவர்கள் எளிதாகச் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். செல்போன், லேப்டாப், நவீன வாஷிங் மெஷின் என்று எல்லாவற்றையும் இயல்பாகப் பயன்படுத்தத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். எனது தோழியின் மாமியார், தனது பேரனுக்கு இணையாக பப்ஜியும் எக்ஸ் பாக்ஸும் விளையாடுவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். இதற்குத் தேவை சிறிது முயற்சியும், கொஞ்சம் பயிற்சியும்தான்.

‘இந்த வயதில் உங்களுக்கு இது தேவையா?’ எனப் பெரியவர்களை ஊக்கமிழக்கச் செய்வதைவிட அவர்

களுக்கும் கற்றுத்தருவது இளைய தலைமுறையினரின் கடமை. இரு தரப்பும் இறங்கிவந்து விஷயங்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டால், தலைமுறை இடைவெளி எனும் பேச்சுக்கு இடமுண்டோ!

(காற்று வீசும்...)

முதுமை எனும் பூங்காற்று: முழு தொடரை வாசிக்க: https://www.kamadenu.in/search#gsc.tab=0&gsc.q=mudhumai-ennum-poongatru&gsc.sort=

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE