தீர்த்தம் அருகே 586 ஆண்டுகள் பழமையான விஜயநகரர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தீர்த்தம் அருகே 586 ஆண்டுகள் பழமையான விஜயநகரர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, நல்லுார் ஊராட்சி தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது, விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம் என்கிற ஊரில் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: “கிராமத்தின் நடுவே உள்ள பசப்பா வீட்டருகே உள்ள கருங்கல் குண்டைச் சுற்றிலும் 20 அடி நீளத்தில் 7 வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் மேல்புறம் திரிசூலமும், கீழ்புறத்தில் அழகிய காளையும், அருகே குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டு விஜயநகர மன்னர் 2-ம் தேவராயன் காலத்தை சேர்ந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய முள்வாய் ராஜியத்தை (தற்போது கர்நாடகா மாநிலம் முலுபாகல்) லக்கண தண்ணாயக்கர் ஆண்டு வந்தார். இதனுள் அடங்கிய விரிவிநாடு என்னும் சூளகிரி பகுதியை இவரது மகா சாவந்தாதிபதி வரதைய்ய நாயக்கர் குமாரர் பெரிய திம்மைய்யநாயக்கர் ஆண்டு வந்தார். இப்பகுதியில் தியாகப்பெருமாள் என்னும் பெயரில் சிவன் கோயில் அப்போது இருந்துள்ளது.

அக்கோயிலின் பூசை செலவிற்காக பொன்னக்கோன் பள்ளியை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டு உள்ள ஹலே கிருஷ்ணாபுரமே அக்காலத்தில் பொன்னக்கோன்பள்ளி என்று அழைத்தது, இக்கல்வெட்டு வாயிலாகத் தெரியவருகிறது. மேலும் இவ்வூரிலோ அல்லது இவ்வூருக்கு அருகிலோ தியாகப் பெருமாள் என்ற பெயரில் சிவன் கோயில் இருந்ததும் தெரியவருகிறது.

எனவே 586 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த ஒரு ஊர் மற்றும் ஒரு சிவன் கோவில் பற்றிய செய்திகளோடு அக்காலத்தில் இப்பகுதியில் இருந்த அரசியல் வரலாறு குறித்து அறிந்துக் கொள்ளவும் இக்கல்வெட்டு துணைபுரிகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE