மானாமதுரையில் பொலிவை இழந்த வைகை ஆறு!

By இ.ஜெகநாதன்

மானாமதுரை: மானாமதுரையில் வைகை ஆறு முழுவதும் நாணல், சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிர மித்ததால் பொலிவை இழந்து வருகிறது. இதையடுத்து, அவற்றை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வைகை ஆறு சிவகங்கை மாவட்டத்தில் மணலூரில் இருந்து வேதியரேந்தல் மதகு அணை வரை 55 கி.மீ.க்கு பாய்கிறது. மேலும் ஆறு மூலம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டங்களில் 87 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இதன்மூலம் 40,743 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், வைகை ஆறு பல ஆண்டுகளாக பராமரிக்கப் படவில்லை. பல இடங்களில் ஆறு முழுவதும் நாணல் புற்கள், சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இதனால் வெள்ளம் வரும் காலத்தை தவிர்த்து, மற்ற சமயங்களில் நாணல், சீமைக்கருவேல மரங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் செல்வ தில்லை. ஒரே பகுதியாக மட்டும் செல்கிறது. இதனால் தண்ணீர் செல்லாத பகுதிகளில் உள்ள கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் நாணல் உள்ள இடங்களில் சட்டவிரோதச் செயல்களும் நடக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக மண லூரில் இருந்து ஒரு சில கி.மீ.க்கு மட்டும் ஆற்றில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர், அப்பணி கிடப்பில் விடப்பட்டது. தற்போது ஆற்றில் பெரும் பாலான இடங்களில் நாணல், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, அதன் பொலிவை இழந்தது. இதையடுத்து ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறுகையில் ‘‘வைகை ஆற்றில் நாணல், சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் தான் தண்ணீர் பரவலாக செல்லும். அப்போது தான் கால்வாய்களில் எளிதில் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். ஆனால் நாணல், சீமைக்கருவேல ஆக்கிரமிப்பால் தண்ணீர் ஒரே பகுதியாக செல்கிறது. மேலும் நாணல் அடர்ந்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலும் நடக்கிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE