மின் கட்டண உயர்வுக்கு எதிராக வேலைநிறுத்தம்; தமிழ்நாடு தொழில் அமைப்பினர் அறிவிப்பு!

By காமதேனு

கோவையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் எனவும் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருவதாகவும் கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும், வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் கூறினர்.

மேலும் வருடா வருடம் ஒரு சதவீத மின் கட்டண உயர்வு இருத்தல் வேண்டும், 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் உட்பட 7 கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருவதாக வேதனை தெரிவித்த தொழில் அமைப்பினர், இது குறித்து தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 25ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதனால் சுமார் 1500 கோடி ரூபாய் வருவாய் இழக்க வாய்ப்புள்ளதாகவும், பலரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE