உள்ளூர் பாடகர்கள், சமூக ஊடகப் பிரபலங்களை பிரச்சாரத்தில் பாய்ச்சும் பாஜக... உத்தராகண்டில் உற்சாகம்

By காமதேனு

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக தனது தேர்தல் பிரச்சார உத்திகளில் உள்ளூர் பாடகர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களை சேர்த்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களம் ரகம்ரகமாய் களைகட்டி வருகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்கள், முதல் முறையாக வாக்களிக்க இருப்போர் ஆகியோரை குறிவைத்து அரசியல் கட்சிகள் புதிய உத்திகளை வகுத்து வருகின்றன. வழக்கமான அரசியல் சார்பு மனநிலையிலான வாக்களர்களுக்கு அப்பால், இந்த இளம் வாக்காளர்களே வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பதில் முக்கியமானவர்கள் என்பதால் அவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் அரசியல் கட்சிகள் பெரும் கோதாவில் குதித்துள்ளன.

பாஜக

இவற்றில் பாஜகவின் பாணி அலாதியானது. சமூக ஊடக பிரபலங்களை பிரதமர் மோடி தனிப்பட்ட வகையில் வாழ்த்தி வருகிறார். சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விழா எடுத்து, மோடி கையால் பரிசுகளும் வழங்கப்பட்டன. கட்சித் தலைமையை பின்பற்றி பாஜக தலைவர்களும் வழக்கமான ஊடகப் பேட்டிகளுக்கு அப்பால், பொதுமக்கள் மத்தியில் செல்வாக்குள்ள யூடியூப் பிரபலங்களின் சேனல்களுக்கு பிரத்தியேக பேட்டிகள் வழங்குகின்றனர்.

இந்த வரிசையில் உத்தராகண்ட் பாஜக உற்சாகமாக உள்ளூர் சமூக ஊடகப் பிரபலங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகிறது. இவர்களில் குறிப்பிடத்தக்கவராக நாட்டுப்புற பாடகர் சவுரப் மைதானி விளங்குகிறார். நாட்டுப்புறப் பாடல்களால் புகழ்பெற்றவர் என்ற போதும், அவர் இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் பெரும் இளைஞர் பட்டாளத்தை ஃபாலோயர்களாக வைத்திருக்கிறார். மேலும் உத்தராகண்ட் மண் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளில் தனது நிகழ்ச்சிகளுக்காக பெயர் பெற்றவர். உத்தராகண்ட் பாஜகவை தொடர்ந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை பாஜகவினர் இவரை அழைத்து கட்சி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பிரபல கர்வாலி பாடகி பூனம் சதியும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். நவி மும்பையில் நடந்த 'உத்தரகாண்ட் திருவிழா' உட்பட, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கட்சி நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பிரபலமான நடாஷா ஷா, பாஜகவால் விரும்பப்படும் மற்றொரு செல்வாக்கு முகம் ஆவார். உத்தராகண்டின் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களுடன் உரையாடுவதில் இவரை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

சமூக ஊடகப் பிரபலங்களுக்கு விருதளிக்கும் பிரதமர் மோடி

லோக்கல் நடிகரான சஞ்சோலி சிங், பஞ்சாபி மற்றும் உத்தரகாண்டி ஆகிய இரு பிராந்தியங்களின் திரைப்படங்களிலும் பெயர் பெற்றவர். மேலும் பாஜகவின் செல்வாக்கு செலுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக உள்ளார். ஹிருத்திக் ராவத், இஷிகா ராவத், சேகர் வர்மா ஏன வேறுபல உள்ளூர் சமூக ஊடக பிரபலங்களையும் பாஜக வெகுவாய் நம்பியுள்ளது. இந்த அணுகுமுறை, அதிக அளவில் இளைஞர்களை சென்றடைய பாஜகவுக்கு உதவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

பரபரப்பு... மதுரையில் மு.க அழகிரியின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் பரபரப்பு... இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் ஈ.டி ரெய்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE