வில்லியனூர் ரயில் நிலையத்துக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், பிரதான ரயில் நிலையமாக புதுச்சேரி ரயில் நிலையம் செயல்படுகிறது. இதற்கு அடுத்து இங்கு முக்கியமாக விளங்குவது வில்லியனூர் ரயில் நிலையம்.

பாரம்பரியம் மிக்க கோயில்கள், கல்விக் கூடங்கள், நகரின் விரிவாக்கப் பகுதிகள் என நாளுக்கு நாள் வில்லியனூர் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள வில்லியனூர் ரயில் நிலையம் வழியே, புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கமாக செல்லும் சென்னை- திருப்பதி தொடங்கி ஏராளமான ரயில்கள் நின்று செல்கின்றன. ரயில்வே அமைச்சகம் புதுவை - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்துக்காக ரூ.740 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.

அத்துடன், ரூ.92 கோடி செலவில் புதுவை ரயில் நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், புதுச்சேரியின் வளர்ச்சியில் முக்கிய நகராகத் திகழும் வில்லியனூரில் உள்ள ரயில் நிலையத்தில் போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை. நாளுக்கு நாள் இங்கிருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனாலும், இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மறறும் கேரளத்தில் உள்ள இதைக்காட்டிலும் சிறுசிறு ரயில் நிலையங்கள் கூட நல்ல முறையில் பேணப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் கூறுகையில், "வில்லியனூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார கூரை ஒரு பகுதி மட்டுமே போடப்பட்டுள்ளது. அதாவது கிழக்குப் பகுதி கூரைப் போடாமல் பயணிகள் வெயில் மற்றும் மழையில் பயணிகள் நிற்கும் அவல நிலை உள்ளது.

வில்லியனூர் ரயில் நிலையம்

பயணிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பாதுகாப்பான வாகன காப்பகம் இந்த ரயில் நிலையத்தில் இல்லை. பயணிகளுக்கு முறையான கழிப்பறை வசதி இல்லை. இத்தகைய வசதிகள் அற்ற நிலையிலும் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் மூலம் பயணித்து வருகின்றனர்.

திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் வில்லியனூர் ரயில் நிலையத்தை பார்வையிட்டு, குறைகளை தீர்க்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை தற்போது நடைபெறும் மேம்பாட்டு பணி நிதியில் இருந்து செய்து தர வேண்டும். வில்லியனூர் ரயில்வே நிலையத்தை மேம்படுத்த வேண்டி திருச்சி கோட்ட மண்டல அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளோம்" என்றார். இதே போல் பல்வேறு தரப்பினரும் வில்லியனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரி எம்.பி திருச்சி ரயில்வே கோட்டத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரும் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். புதுச்சேரி அரசும் இவ்விஷயத்தை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு சென்று வில்லியனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE