பெருந்துரை சிப்காட் இருப்பில் 63,000 டன் அபாய திடக்கழிவுகள் - விளைவு என்ன?

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, அபாயகரமான 63 ஆயிரம் டன் திடக்கழிவுகளால், நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து, 2,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு தொடக்க விழா நடந்த பெருந்துறை சிப்காட் வளாகத்தில், ஜவுளி, தோல் பதனிடும் ஆலைகள், ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நூல் மற்றும் ஜவுளி மில்கள், இரும்பு மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், சிப்காட் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

மூடப்பட்ட தோல் ஆலைகள்: பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஜவுளித்தொழில் சார்ந்த சாய, சலவைத் தொழிற்சாலைகளும், 10-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வந்தன. இதில், தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்ததால், தற்போது தோல் தொழிற்சாலைகள் இயங்குவதில்லை.

தோல் தொழிற்சாலைகள் இயங்கியபோது, அவற்றில் இருந்து வெளியாகும் கழிவு நீரை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுத்திகரித்ததன் மூலம் சேகரமான 63 ஆயிரம் டன் திடக்கழிவுகள் சிப்காட் வளாகத்தில் தேக்கமடைந்துள்ளன.

இந்த திடக்கழிவுகள், திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. அபாயகரமான இந்த திடக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் 2018-ல் உருவாக்கப்பட்டது.

சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசினைத் தடுக்கவும், சட்டவிரோத செயல்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் இந்த அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திடக்கழிவுகள் குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

சிப்காட் வளாகத்தில் செயல்படும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க இரு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. இவற்றில் தோல் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கான சுத்திகரிப்பு நிலையம் இயக்குவதில்லை.

இருவகையான திடக்கழிவுகள்: சாய, சலவைத் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, 10-க்கும் மேற்பட்ட ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட ஆலைகள், தாங்களாக, சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துக் கொண்டுள்ளன.

கழிவுநீரை சுத்திகரிக்கும் போது, நச்சு திடக்கழிவு, கலப்பு உப்பு என இருவகையான திடக்கழிவுகள் சேகரமாகின்றன. இந்த திடக்கழிவுகளை அகற்றுவது குறித்த முறையான திட்டமிடல் இல்லாததால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவை தேக்கமடைந்துள்ளன. பெருந்துறை சிப்காட்டில் தற்போது 63 ஆயிரம் டன் திடக்கழிவு இருப்பில் உள்ளது. இவை திறந்தவெளியில் வைக்கப்படும்போது, மழையில் நனைந்து, நிலத்தடி நீரை பாதிக்கிறது. மழைநீர் ஓடைகளில் கலக்கும் போது ஓடை நீரும் மாசடைந்து வருகிறது.

பெருந்துறை சிப்காட் வளாகம்

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதன் அடிப்படையில், தற்போது திடக்கழிவுகளை அகற்றும் பணியில் மாசுகட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திடக்கழிவுகளை அகற்ற நீண்ட காலம் ஆகும் என்ற நிலையில், உடனடியாக திறந்தவெளியில் உள்ள திடக்கழிவுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பினை தடுக்க முடியும்.

பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஆலைகள் விதிமுறைகளின்படி இயங்குகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க செல்லும் போது, மக்கள் பிரதிநிதிகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், ஈரோடு ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவிலும் மக்கள் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் தவறுகள் நடப்பதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குளத்தில் சேரும் கழிவுநீர்: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகளால் நிலத்தடி நீர் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கிணறுகள், ஓடைகளில் துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீர் ஓடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிப்காட் அருகில் 10 ஏக்கரில் அமைந்துள்ள ஓடைக்காட்டூர் குளம், வாய்ப்பாடி குளம் மற்றும் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாலத்தொழுவு குளத்திற்கும் மாசடைந்த கழிவு நீர் சென்று சேருகிறது.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலம், பாலத் தொழுவு குளத்திற்கு நீர் நிரப்பப்படும் நிலையில், மாசடைந்த நீர் கலப்பதால், மொத்த குளத்தின் நீரும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டால், சென்னிமலை வட்டாரம் முழுமைக்கும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

பெருந்துறை சிப்காட் திடக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர் முத்துசாமி, ‘பெருந்துறை சிப்காட்டில் திடக்கழிவு, 63,000 டன் வரை தேங்கி இருந்தது. கடந்த மார்ச் முதல் ஆக., வரை, 8,551 டன் திடக்கழிவை அகற்றி, ராமநாதபுரத்தில் உள்ள ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தொடர்ந்து திடக்கழிவை அகற்றும் பணி நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

பெருந்துறை சிப்காட்டில் அபாயகரமாக உள்ள நச்சு திடக்கழிவுகளை முழுமையாக அகற்ற அரசு தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, கழிவுகளால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் சுற்றுச்சூழல்வாதிகள்.

நிறைவேறாத வாக்குறுதி: பெருந்துறை சிப்காட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதைத் தடுக்க, ரூ 56 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இப்பணிகள் ஆறு மாதத்தில் முடிவடையும் என்றும் அமைச்சர் உதயநிதி உறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 10 மாதங்கள் ஆன நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இதுவரை டெண்டர் கூட கோரப்படவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், வேதனையடைந்துள்ளனர் சிப்கட்டால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE