கூடலூர், முதுமலையில் இருந்து நியூயார்க், லண்டனுக்கு பறந்த பழங்குடியினரின் யானை சிற்பங்கள்!

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் உணவு, இடப்பெயர்வில் பெரிய அளவிலான பாதிப்பை லாண்டனா எனப்படும் உண்ணிச் செடிகள் ஏற்படுத்தி வருகின்றன. வனத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த களைச்செடிகளை அகற்ற பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, யானைகளுக்கு எதிரான அந்த களை தாவரத்திலிருந்து, தத்ரூபமான யானை உருவங்களை உள்ளுர் பழங்குடியினர் மூலமாக வடிவமைத்து வருகிறது தனியார் தொண்டு நிறுவனம்.

முதுமலை, கூடலூர் ஆகிய பகுதிகளிலுள்ள சாலையோரங்களில் காணப்படும் லாண்டனா எனப்படும் உண்ணிச் செடி குச்சிகளை பயன்படுத்தி,யானைகள் உருவங்களை உருவாக்க தொரப்பள்ளி பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தனியார்தொண்டு நிறுவனம் பயிற்சி அளித்துவருகிறது. இதன் மூலமாக,பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதோடு, காடுகளில் உள்ள உண்ணிச்செடிகளை அகற்றும் வகையில் கலைநயத்துடன் யானைகள் மற்றும் இதர உருவங்களையும் உருவாக்கிவருகின்றனர்.

இப்பணியில், பெட்டகுரும்பா், பனியர், காட்டுநாயக்கர், சோலிகா ஆகிய பழங்குடியின சமூகங்களை சேர்ந்த 200 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தயாரித்த யானை பொம்மைகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள அருங்காட்சியகத்துக்கு 100-க்கும் மேற்பட்ட யானை பொம்மைகள் அனுப்பிவைக்கப்பட்டன. இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நியூயார்க் நகரை அலங்கரிக்க இருக்கும் இந்த தத்ரூபமான யானை உருவங்களை, அங்குள்ள மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனத்தினர் கூறும்போது, "முதுமலை வனத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த களை தாவரத்தை அகற்றி, அதன் குச்சிகளில் இருந்து வீட்டுக்கு தேவையான நாற்காலி, மேஜை ஆகியவற்றை தயாரித்தோம். உள்ளுர் பழங்குடியினர் தங்களின் சிறப்பான கலைத் திறனை வெளிப்படுத்தினார்கள். களை தாவரங்களால் யானைகள் சந்திக்கும் பிரச்சினைகளை உலக அளவில் கொண்டு செல்ல நினைத்தோம்.

இந்த காடுகளில் இருக்கும் யானைகளை புகைப்படம் எடுத்து, அவற்றை போலவே தத்ரூபமாக உருவாக்கினோம். லண்டன் அரண்மனை முதல் அமெரிக்காவின் நியூயார்க் வரை உலகின் பல்வேறு பகுதிகளிலும், இந்த யானை உருவங்கள் அலங்கரித்து வருகின்றன. களை தாவரத்தை அகற்றுவதோடு, பழங்குடியினரின் வாழ்வாதாரத்துக்கும் வழிவகை ஏற்பட்டிருக்கிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE