மகசூல் அதிகரிப்பால் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி - கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் மகசூல் அதிகரித்துள்ளதால், சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாவ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையை அடிப்படையாகக் கொண்டு காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆற்றுப் பாசனம்: குறிப்பாக, தென்பெண்ணை ஆற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ரோஜா, வாழை, முள்ளங்கி, கொத்தமல்லி, புதினா, தக்காளி, முட்டைகோஸ், காலி ஃபிளவர் உள்ளிட்ட காய்கறி பயிர்களை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் சூளகிரி மற்றும் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தைகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

20 ஆயிரம் ஏக்கர்: இதில், சூளகிரி சுற்று வட்டாரக் கிராமங்களான போகிபுரம், மருதாண்டப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, ஒமதேப்பள்ளி, சந்தாபுரம், காமநாயக்கனபேட்டை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு ரக முட்டைகோஸை சாகுபடி செய்துள்ளனர்.

நிகழாண்டில், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தையில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை: இதுதொடர்பாக காமநாயக்கனபேட்டையைச் சேர்ந்த விவசாயி கிரண்குமார் மற்றும் சிலர் கூறியதாவது:

மலைப் பகுதி மற்றும் சமவெளி பகுதியில் முட்டைகோஸை சாகுபடி செய்யலாம், இது 3 மாத பயிராகும். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் 30 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன. உழவுக் கூலி, நடவுப் பணி, களையெடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.1 வரை செலவாகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மூட்டை முட்டைகோஸ் (100 கிலோ) ரூ.1,700 முதல் ரூ.2 ஆயிரம் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது, மகசூல் அதிகரிப்பால் சந்தைக்கு வரத்து அதிகரித்து ஒரு மூட்டை ரூ.100 முதல் ரூ.120 வரை மட்டுமே வியாபரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், சாகுபடி செலவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

காய்கறிகளைப் பொறுத்த வரையில் சந்தை தேவை, மகசூல் அடிப்படையில் விலை நிர்ணயம் ஏற்ற, இறக்கத்தில் இருப்பதை தவிர்க்க அரசு காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE