மதுரை மாநகராட்சியில் ரூ.16 கோடியில் 16 கி.மீ-க்கு புதிய சாலைகள்: மத்திய, மாநில அரசுகள் நிதி!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு புதிய சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ரூ.16 கோடி மானிய நிதி வழங்கியுள்ளது. இதைக் கொண்டு 16 கி.மீ. தொலைவுக்கு மாநகரில் புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது.

ஒரு நகரின் வளர்ச்சி அதன் சாலைகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. ஆனால் மதுரை மாநகரில் அந்த அடிப்படையே சிதைந்து போய் உள்ளது. நகர் முழுவதும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை, மேம்பாலம் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடப்பதால் சாலைகள் திரும்பிய பக்கமெல்லாம் தோண்டி போடப்பட்டுள்ளன. மாநகராட்சியே நினைத்தாலும் சேதமடைந்த சாலைகளை அவ்வளவு எளிதாக சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

மாநராட்சி புறநகர் 28 வார்டுகளில் மட்டும் சாலைகள், பாதாளச் சாக்கடைப் பணிகள் ஒரளவு நிறைவு பெற்றுள்ளன. மற்ற வார்டுகளில் அதிக போக்குவரத்து, மக்கள் பயன்பாடுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் புதிதாக போடப்படுகின்றன. மற்ற சாலைகளில் மக்கள், வாகன ஓட்டிகள் பயணிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மாநகராட்சியில் 13 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,545 கி.மீ. மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இதில், 265 கி.மீ., சாலைகளில் பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. 1,253 கி.மீ., சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளன. இவற்றில் பொது நிதி, மானிய நிதி போன்ற பல்வேறு சிறப்பு நிதி மற்றும் திட்டங்கள் மூலம் மாநகராட்சியில் இதுவரை கடந்த 3 ஆண்டில் மட்டும் 350 கோடியில் 650 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன.

மீதமுள்ள சாலைகளை போடுவதற்கு பொது நிதியில் போதுமான நிதி ஆதாரம் இல்லை. அதனால், மாநகராட்சி நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிதியைப் பெற்று மீதமுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசு நிதிக் குழு மானியத்தில் இருந்து ஒரே தவணையில் ரூ.7.5 கோடியும், மத்திய அரசின் தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தில் ரூ.8.5 கோடி மானியமும் மாநகராட்சிக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மாநகராட்சியில் சுமார் 16 கி.மீ. சாலை புதிதாக போடப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதுரை சுற்றுலா, ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற நகரம் என்பதால் சாலை கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையிலே மத்திய, மாநில அரசுகள் இந்த நிதியை மாநகராட்சிக்கு வழங்கி இருக்கின்றன. அக்டோபர் மாதம் மழை தொடங்கும் முன்பாக இந்த ரூ.16 கோடி நிதியை கொண்டு புதிய சாலைகள் போடப்படும். இது தவிர இன்னும் பிற சிறப்பு நிதிகளை கேட்டு தமிழக அரசிடம் கோரியுள்ளோம். அந்த நிதியும் ஒன்றன், பின் ஒன்றாக வந்த பிறகு மாநகராட்சி முழுமையும் சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்" என்று அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE