இடையக்கோட்டையில் குறுகிய காலத்தில் உருவான காடு! - பசுமை தமிழ்நாடு திட்டத்தில் சாதனை

By ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் ‘மியாவாக்கி’ முறையில் நடவு செய்யப்பட்ட 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்ந்து தற்போது காடு போல் காட்சியளிக்கிறது. இந்த ‘மரப்பூங்கா’வுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

தற்போது உலகம் முழுவதும் ‘மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகளை உருவாக்கும் முறைக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த முறையில் மரங்கள் வேகமாக வளர்கின்றன. குறுகிய இடத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் குறுங்காடுகளை விரைவாக உருவாக்க முடிகிறது. ஜப்பானை சேர்ந்த அகிரா மியாவாக்கி என்பவர்தான் இம்முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். எனவே, இந்த குறுங்காடு வளர்ப்பு முறைக்கு அவரது பெயரிலேயே ‘மியாவாக்கி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பை 23.7 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கோடு, பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

6 மணி நேரத்தில் 6 லட்சம் மரங்கள்: அதன்படி ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையக்கோட்டை கிராமத்தில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்க திட்டமிடப்பட்டது. இங்கு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வறட்சி பிரதேசம்போல் காட்சியளித்தது. அதை அகற்றிவிட்டு, நிலத்தை சீரமைத்து பலவகை மரக்கன்றுகளை வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

இத்தொகுதியின் எம்எல்ஏவும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி முயற்சியால் 2022 டிச. 23-ம் தேதி 6 மணி நேரத்தில் வேம்பு, புங்கம், நாவல், இலுப்பை, அத்தி, பூவரசு, வாகை, புளி, இச்சி, மகிழம், கடம், நீர் மருது என மொத்தம் 22 வகையான 6 லட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டன. தற்போது அங்கு குறுங்காடு உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடப்பட்டு ஓராண்டு 9 மாதங்களான நிலையில் தற்போது மரங்கள் வளர்ந்து அந்த இடம் அடர்ந்த காடாக காட்சியளிக்கிறது. மரங்களுக்கு நடுவே நடந்து செல்லும்போது காட்டுக்குள் இருப்பது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. நடந்து செல்ல வசதியாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குறுங்காட்டால் இப்பகுதியில் பெய்யும் மழையின் அளவும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. உள்ளூர் மக்களால் ‘மரப்பூங்கா’ என்று அழைக்கப்படும் இந்த குறுங்காட்டின் நடுவில் சிறுவர் பூங்கா, மரகதப் பூங்கா, மூலிகை பூங்கா ஆகியவை இடம் பெற்றுள்ளன. மரங்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சுவதற்கு ஊற்றுக் கிணறு, பசுமைக் கிணறு மற்றும் வாய்க்கால் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த குறுங்காடு இருக்கும் பகுதியில் நிலவும் இதமான தட்ப வெப்ப நிலை, அமைதியான சூழல், மாசுபடாத காற்று உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மரப்பூங்காவுக்குச் செல்ல அனுமதி இலவசம்.

இந்த மரப்பூங்காவில் மரக்கன்றுகளை உருவாக்கி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப அனுப்பி பசுமை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது வரை 4 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நட்டு பராமரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து இடையக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் இந்த குறுங்காட்டை சென்றடையலாம். மரங்களை நேசிப்பவர்கள் தவறவிடக் கூடாத இடம் இந்த மரப்பூங்கா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE