தங்கம் விலை, விற்பனை ‘அலர்ட்’ - அடுத்த 4 மாதங்களுக்கு எப்படி?

By இல.ராஜகோபால்

கோவை: அக்டோபரில் தொடங்கி ஜனவரி இறுதி வரை திருமணம், பண்டிகை மற்றும் அறுவடை காலம் என்பதால் கோவையில் தங்க நகை வணிகம் சிறப்பான வளர்ச்சி பெறும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புகழ் பெற்றுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.5 ஆயிரம் வரை மக்கள் சேமிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரி குறைப்பால் கிடைத்த பலன் ஒருபுறமிருக்க சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இத்தகைய சூழலில் எதிர்வரும் நான்கு மாதங்கள் சுபநிகழ்ச்சி, பண்டிகை வர உள்ளதால் கோவையில் தங்க நகை தொழில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தொழில்துறையினர் தெரிவித் துள்ளனர்.

முத்து வெங்கட்ராம்

இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா தொற்று பரவலுக்கு முன் கோவையில் தினமும் 200 கிலோ அளவுக்கு வணிகம் நடைபெற்று வந்தது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தற்போது வரை தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்கிறது. இன்றைய சூழலில் தினமும் 70 கிலோ அளவுக்கு மட்டுமே வணிகம் நடைபெறுகிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியை போல், அமெரிக்காவில் செயல்படும் ‘பெட்’ (பெடரல் ரிசர்வ் சிஸ்டம்) வங்கி முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை 5.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத் துள்ளது. தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிப்பதால் விலையில் தாக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய அரசு இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இல்லையெனில் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்திருக்கும்.

விலை உயர்வு தொடரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையிலும் புரட்டாசி 15ம் தேதிக்கு பின் அதாவது அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை திருமணம், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகைகள் மற்றும் அறுவடை காலம் வர உள்ளதால் தங்க நகைகள் விற்பனை அடுத்த நான்கு மாதங்களுக்கு சிறப்பாக இருக்கும். தினமும் 150 கிலோ அளவிலான தங்க நகை வணிகம் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE