தூத்துக்குடியில் வெள்ள தடுப்புக்கு மீட்டெடுக்கப்படுமா மலட்டாறு வழித்தடம்?

By KU BUREAU

கோவில்பட்டி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, மலட்டாறு வழித்தடத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ஓட்டப்பிடாரம் எல்கைக்கு உட்பட்ட பட்டினமருதூர் கிராமத்தின் பழைய பெயர் ‘கேரளாந்தகபுரம்’ (குரங்குடி நாடு) என்று பதிவேற்றம் ஆகியுள்ளதையும், 9-10-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதியில் ‘மலட்டாறு’ என்ற ஆறு பாய்ந்துள்ளது என்பதையும் வரலாற்று பதிவுகளில் காண முடிகிறது.

கி.பி.1778-ம் ஆண்டு வெளியான, ‘History Of The Military Transactions Of The British Nation In indostan’ என்ற புத்தகத்தில், ராபர்ட் ஓரம் என்பவர் வரைந்த தென்மாவட்ட வரைபடத்தில், செங்கோட்டை அருகே வடகரையில் இருந்து ஒரு நதி உற்பத்தியாகி, தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் கடலில் சங்கமமானது காட்டப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி அருகே இலஞ்சியில் தொடங்கும் ‘சிற்றாறு’ சற்று வடகிழக்காக ஓடி, வடகரையில் இருந்து வரும் நதியுடன் முறம்பன் கிராமம் அருகே இணைந்ததும் மேற்கண்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சங்கம்பட்டி என்ற கிராமம் முறம்பன் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: வடகரையில் உற்பத்தியான இந்த ஆறு, தொடர் சங்கிலி போல, அடுத்தடுத்து கண்மாய்களை நிரப்பி, இறுதியாக கீழப் பட்டினத்தில் (தற்போதைய தருவைகுளம்) கடலில் சங்கமித்துள்ளது. வணிகத்தில் சிறந்து விளங்கிய கீழப்பட்டினம் நகரமும், மலட்டாறு நீர் வழித்தடங்களும் இயற்கை பேரிடரால் அழிந்து போய்விட்டன.

1778-ம் ஆண்டு ராபர்ட் ஓரம் வரைந்த வரைபடம்.

கோரம்பள்ளம் மட்டுமே வடிகால்: கடந்த மாதம் 13-ம் தேதி நீர்வளத்துறை அதிகாரிகள் முறம்பன் பகுதியில் நடத்திய ஆய்வில், 1778-ம் ஆண்டு வரைபடத்தை, தற்போதுள்ள நீர்வழித்தட வரைபடத்துடன் ஒப்பீடு செய்தனர். இதில், சங்கரன்கோவில், கழுகுமலை போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் பிரதான நீர்வழித்தடங்கள், கங்கைகொண்டான் வழியாக சீவலப்பேரியில் தாமிரபரணியுடன் சங்கமமாவது தெரியவந்தது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையின்போது கங்கைகொண்டானில் இருந்து வந்த உபரி நீரும், குருமலை, கடம்பூர் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று நீரும் முறம்பனில் சேர்ந்து பயணித்து, பின் திசை மாறி தெற்காக கொம்பாடி, சவரிமங்கலம், உமரிக்கோட்டை, கீழ தட்டப்பாறை, அல்லிக்குளம் வழியாக, தாமிரபரணியின் பிரதான வடிகாலான புதுக்கோட்டை - கோரம்பள்ளம் வழித்தடத்தை அடைந்து, தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் கடலில் கலந்துள்ளது.

அதேபோல், கழுகுமலை, சங்கரன் கோவில் பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும் தெற்கு நோக்கி கங்கை கொண்டான், சீவலப்பேரி வழியாக தாமிரபரணியையே வந்தடைகிறது. இதில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் பூவாணி, செக்காரக்குடி, தட்டப்பாறை, புதுக்கோட்டை வழியாக கோரம்பள்ளம் வடிகாலையே சென்றடைகிறது.

பெரும்பாலான நீர்வழித்தடங்கள் தாமிரபரணி வாயிலாகவே கடலில் சங்கமிக்க வேண்டிய நிலை உள்ளதால், சுற்றுவட்டார நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தாமிரபரணி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் ஒரே நேரத்தில் தொடர்மழை ஏற்படும்போது, தற்போதைய கோரம்பள்ளம் வடிகாலின் பங்களிப்பே பிரதானமாக அமைகிறது. மாற்றுப்பாதை இல்லாத காரணத்தால் வெள்ளநீர் சமதள நிலங்கள் வாயிலாக கடலை நோக்கி கிழக்காக பயணித்து பேரிடரை ஏற்படுத்துகிறது.

நிலவியல் வாட்டம் உள்ளது: தூத்துக்குடி மாவட்டம் கொம்பாடி, சவரிமங்கலம் பகுதியில் இருந்து வரும் வெள்ளநீரை முறையாக ஓணாமக்குளம், இளவேளங்கால், ஒட்டநத்தம், மகராஜபுரம், சவரிமங்கலம், வள்ளிநாயகபுரம், சாமிநத்தம், நயினார்புரம், மேல வேலாயுதபுரம், புதூர் பாண்டியாபுரம், அய்யனார்புரம் வழியாக வெள்ளநீர் வடிகால் திட்டத்தை ஏற்படுத்தி, மடைமாற்றம் செய்தால், தூத்துக்குடி மாநகரப்பகுதியில் வெள்ளச் சேதத்தை பெருமளவு குறைக் கலாம். செயற்கைகோள் வரைபடம் வாயிலாக ஆய்வு செய்ததில், நிலவியல் வாட்டம் போதுமானதாக உள்ளது.

அதேபோல், கழுகுமலை, சங்கரன்கோவில் பகுதியிலிருந்து வரும் வெள்ளத்தை, வடக்கு இலந்தைகுளம் பகுதியிலிருந்து ஓணாமக்குளம் வரை தடம் ஏற்படுத்தியோ அல்லது பாண்டவர்மங்கலம், காமநாயக்கன்பட்டி வழியாக எப்போதும்வென்றான் ஓடை வழியாகவோ மடைமாற்றி திருப்பிவிடலாம். இதன் மூலம் எப்போதும் வென்றானுக்கு கிழக்கே உள்ள தருவைகுளம், கல்மேடு, வேப்பலோடை, குளத்தூர் போன்ற பகுதிகள் நீர் மேலாண்மை பெருகும். எனவே, அரசு அதிகாரிகள் இதனை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE