குமுளி: 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க கர்னல் ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளரால் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டுமானப் பணிகள் 1887-ல் தொடங்கப்பட்டு 1893-ல் முடிக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பென்னிகுவிக் ஏற்படுத்தி தந்தார்.
இவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேக்கடியில் (தற்போதைய வன சோதனைச்சாவடி முகப்பு அருகே) ஆரம்பப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு தமிழ் வழிக் கல்வியும் போதிக்கப்பட்டது.
சுமார் 150 மாணவ, மாணவியர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணிபுரிந்தனர். அப்போது இப்பகுதி தமிழக-கேரள பாகுபாடு இன்றி சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இப்பகுதி கேரள எல்லையாக மாற்றப்பட்டது.
அணை கட்டுமானப் பணி முடிந்தாலும் இப்பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், விவசாய கூலியாட்களும் அதிகளவில் இருந்ததால் அவர்களின் குழந்தைகள் இப்பள்ளியில் தொடர்ந்து கல்வி பயின்றனர். பென்னிகுவிக்கின் உயரிய நோக்கத்தைப் போற்றும் வகையில் இப்பள்ளியை தமிழக அரசே தொடர்ந்து நிர்வகித்து வருகிறது.
கேரளாவில் தமிழக அரசு சார்பில் செயல்பட்டு வரும் ஒரே தமிழ்ப் பள்ளி என்ற சிறப்பு இதற்கு உண்டு. இப்பள்ளிக்கு தேக்கடி, ரோசாப்பூகண்டம், அம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் கல்வி பயில வருகின்றனர். இருப்பினும் தற்போது தனியார் பள்ளி மோகத்தினால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது. தற்போது 9 மாணவர்களே உள்ளனர். இவர்களுக்கு ஒரு தலைமையாசிரியை மற்றும் ஒரு ஆசிரியை கற்பித்து வருகின்றனர்.
பராமரிப்பின்றி சேதம்: மலைப்பகுதியான இங்கு பணிபுரிபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வகுப்பறைகள் இடிந்து, சிதிலமடைந்துள்ளதால் வராந்தாவிலேயே தற்போது வகுப்புகள் நடைபெறு கின்றன.
மேற்கூரை சேதமடைந் துள்ளதால் மழைநீர் உள்ளே புகுந்து தேங்கி விடுகிறது. அதில் உள்ள ஓட்டை வழியே குரங்குகள் உள்ளே புகுந்து சமையல் பொருட்களை எடுத்து செல்கின்றன. ஆகவே இவற்றை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த பல வழிகளிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை யாசிரியை லாவண்யா கூறுகையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், தமிழக அரசு வழங்கும் இலவச கல்வித் திட்டங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களிடம் விளக்கி வருகிறோம். மேலும் இக்குழந்தைகளின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் என்பதால் மாணவர்களை எங்களுடைய சொந்தச் செலவிலேயே ஆட்டோ மூலம் அழைத்து வருகிறோம், என்றார்.
தேக்கடியில் பல (கேரள)அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இருந்தாலும் கல்விக்கான திட்டங்களில் இப்பள்ளி முன்னுதாரணமாக உள்ளது. ஜான் பென்னிகுவிக் அணையை மட்டும் கட்டவில்லை. தொழிலாளர் நலனிலும் பெரிதும் அக்கறை காட்டியுள்ளார். இதற்காக அவர்களுக்கு குடியிருப்பு, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி என்ற நோக்கிலும் செயல்பட்டுள்ளார். இதனால் அணை கட்டிய தொழிலாளர்களின் தலைமுறையும் தலை நிமிர்ந்துள்ளது.
அணைமட்டுமே பென்னிகுவிக்கின் அடையாள மாக பலரும் அறிந்துள்ள நிலையில், இப்பள்ளியும் அவரின் சாதனைகளில் ஒன்றாக இன்றளவும் விளங்கி வருகிறது. ஆகவே, இப்பள்ளியை புதுப்பித்து மேலும் மேம்படுத்த வேண்டும் என்று தோட்டத் தொழிலாளர்களும், தமிழக விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.